திருமண வரம் அருளும் ஆனித் திருமஞ்சனம்


சிதம்பரம், உத்தரகோச மங்கை போன்ற ஆலயங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் மிக சக்தி வாய்ந்தது.  ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணாமலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெறும்.

ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனி திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் பெயர் உண்டு. 

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டுகளித்தால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக் காட்டுவார்கள்.

நடராஜரின் இடது பாகம் சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியை பெற முடியும். 

அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வலம் அதிகரிக்கும் என்பது ஐதீகமாகும்.

அபிஷேகம் முடிந்த பிறகு இறைவனும், இறைவியும் ஆனந்தத் தாண்டவமாக நடனம் ஆடியபடி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். இந்த நடனத்தை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இதனால்தான் இந்த நடனத்தை காண தேவர்களும், முனிவர்களும் படையெடுத்து வந்து ஆவலோடு காத்திருப்பார்கள் என்பது ஐதீகமாகும்.

ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் வானத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி வைத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில், வருடத்திற்கு இரு முறை தடவை மட்டுமே ஆயிரம்கால் மண்டபத்துக்கு ஸ்ரீநடராஜ பெருமான் எழுந்தருள்வார். ஒன்று மார்கழி திருவாதிரை தினம். மற்றொன்று ஆனி திருமஞ்சனம் தினம்.

எனவே ஆனி திருமஞ்சன திருநாளில் ஸ்ரீநடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்துக்கு வருவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கடந்ததும் வலது பக்கம் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் இதற்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.

60-க்கும் மேற்பட்ட வகை, வகையான அபிஷேகங்களை நடராஜருக்கு செய்ததாக குறிப்புகள் உள்ளன. 

ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்பவர்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைகூடும்.



Leave a Comment