ஆனி உத்திர திருமஞ்சனத்தின் சிறப்புகள்
ஆனித் திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது, கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் நேரமே ஆனித் திருமஞ்சன நாள்.
மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகள். கல்விக்கு அதிபதி புதன். அதிலும் வானவியல் அறிவினைத் தருவது புதன். ஆனித்திருமஞ்சன நாளில் நடராஜப் பெருமானை தரிசிக்க வானவியல் ஆய்வாளர்கள் நிறைய பேர் வருவதை நாம் இன்றும் காண முடியும்.
ஆனி மாதத்தில் வானம் தெள்ளத் தெளிவாகக் காட்சியளிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக அணுகாமல், அதனை ஆழ்ந்து ஆராயும் பக்குவத்தைத் தருபவர் புதன். அதனால்தான் அவரது ஆட்சியினைப் பெற்ற மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே ஆராய்ச்சி செய்யும் குணத்தினைப் பெற்றிருக்கிறார்கள்.
புதனுக்கு உரிய மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆனி மாதம் அறிவியல் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவினைத் தரும் மாதமாக அமையும்.
வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்த ஜாமம் என்று ஒரு நாளின் பொழுதுகளை, ஆறு வகையாகப் பிரித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் ஆலயங்களில் தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது.
இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள்.
மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள் ஆகும். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நாம் செய்யும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இந்த இரு நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்பே அதிகாலையிலேயே நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்துவார்கள். அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சனம் மிக மிக சிறப்பு வாய்ந்தது.
மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய இந்த தினத்தில் சிவாலயங்களுக்கு சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
Leave a Comment