சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை


இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.

ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள் முருகப்பெருமான் ஆகும். "சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை" எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். 

வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.
 



Leave a Comment