நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் ரத்து 


பிரசித்தி பெற்ற திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.  காந்திமதி அம்மன் கோவில் ஆனித் தேரோட்டமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயிலில் ஆனித்தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனி மாதத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் காட்சியைக் காண வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

இந்த ஆண்டு விழா நாளை 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜூலை 3ம் தேதி தேரோட்டம் நடைபெற வேண்டும். திருவிழாவிற்காக பிரம்மாண்ட தேர்களும் அலங்காரத்திற்கு தயார் செய்யப்பட்டு வந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆனித் தேரோட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இந்த சூழ்நிலையில் திருவிழாவை நடத்துவது சரியாக இருக்காது என்று கருதி ஆனிப்பெருந்திருவிழாவை ரத்து செய்வதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

500 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த தடையும் இன்றி நடைபெற்ற தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்ட பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.



Leave a Comment