விநாயகரை வழிபட உகந்த புதன்கிழமை
முழுமுதற் கடவுள் விநாயக பெருமானை தினம்தோறும் வணங்குவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் புதன் கிழமைகளில் வணங்கினால் மிக மிக சிறந்தது. நாம் வேண்டியதை விரைவில் நிறைவேற்றி விடுவார். இதற்காக வெறும் ஒரு ரூபாயை வைத்தே அந்த விநாயகப்பெருமானை ஏமாற்றி விடாதீர்கள். அவருக்குப் பிடித்த மற்ற பொருட்களையும் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும். விநாயகருக்கு புதன்கிழமை தோறும் சில பொருட்களை வாங்கி தருவதன் மூலம் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் மறைந்து விடிவு காலம் பிறக்கும் என்று நம் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த பொருட்களை புதன்கிழமை அன்று வினாயகரிற்கு வாங்கி கொடுத்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா. சிலருக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற விநாயகருக்கு புதன்கிழமை அன்று சிகப்பு நிற குங்குமத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று நினைத்து, முட்டிமோதி ஒரு தொழிலை ஆரம்பித்து இருப்போம். ஆனால் அதில் முன்னேற்றமே இருக்காது.
ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். அடுத்ததாக வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றங்கள் இருக்காது. தேவையற்ற நபர்களால் பிரச்சனை வரும். சம்பள உயர்வு இருக்காது. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்காது. கொடுத்த கடன் திரும்பி வராது. இப்படி நம்முடைய வருமானத்தை தடுக்கும் தடைகளை நீக்க விநாயகருக்கு புதன்கிழமையில் அருகம்புல்லும், வெல்லமும் வாங்கி கொடுக்க வேண்டும். அடுத்ததாக ஈட்டிய செல்வத்தை சேமித்து வைத்துக்கொள்ள, உங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கோ அல்லது திருவுருவப் படத்திற்கோ ருத்ராட்ச மாலையை அணிவிக்கலாம்.
வாரம் ஒரு முறை அந்த ருத்ராட்ச மாலையை எடுத்து பசும்பாலிலோ அல்லது பன்னீரிலோ ஊறவைத்து பின்பு அந்த மாலையை எடுத்து விநாயகருக்கு அணிவிப்பது மிகவும் சிறப்பானது. அடுத்ததாக லட்சுமி தேவியுடன் இருக்கும் விநாயகரின் திருவுருவப் படத்தின் முன்பு ஒரு அருகம்புல்லை வைத்து புதன்கிழமைகளில் செல்வம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு, அந்த அருகம்புல்லை சிகப்பு துணி ஒன்றில் வைத்து மடித்து, நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் உங்கள் வீட்டின் பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. இதேபோல் உங்களது வீட்டில் இருக்கும் விநாயகர் சிலைக்கு தினம்தோறும் இரண்டு ஏலக்காயை நைவேத்தியமாக படைத்து வருவது மிகவும் சிறப்பான ஒன்று.
Leave a Comment