சாவித்ரி விரதத்தின் பலன்கள்...


பாராசர முனிவர் ஆலோசனைப்படி மாத்ர நாட்டு மன்னன் அசுவபதி சாவித்ரி விரதம் செய்ய அவன்முன் தோன்றிய சாவித்ரி தேவி, மன்னன் மனைவி மாலதிக்கு தன் அம்சமாக ஒர் மகளாக ஜனிக்க அருள் கொடுத்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சாவித்ரி மணப் பருவத்தில் துயிமதிதேசன் மகன் சத்யவானின் குணவிசேஷங்களைக் கேள்விப்பட்டு அவனைப் பார்க்காமலேயே காதல் கொண்டாள். 

அவன் அற்ப ஆயுள் உள்ளவன் என நாரதர் சொல்லியும் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சத்யவானின் பெற்றோர்கள் பார்வை இழந்து நாட்டையும் இழந்து காட்டில் சத்தியவானுடன் வாழ்ந்திருக்க அவர்களுடன் சாவித்ரியும் வாழ்ந்திருந்தாள். 

தேவகன்னியருக்கு அன்னை உமா உபதேசித்த காமாட்சி விரதத்தை நாரதர் சொல்லியபடி தொடர்ந்து மூன்று பகல் மூன்று இரவு உறங்காமல் இறைவனை வழிபட்டு ஒருமுறை மட்டும் உணவு உண்டு கடினமான விரத முறைகளை மேற்கொண்டாள்.

காட்டில் தனக்கு கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் அவரையும் கொண்டு செய்த அடையையே நெய்வேத்தியமாக வைத்து நோன்பிருந்தாள். 

நான்காம் நாள் காட்டிற்கு விறகு வெட்டச் சென்றபோது சத்தியவான் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தான். சாவித்ரிதேவியின் உண்மையான பக்தையான சாவித்திரிக்கு யமன் சத்தியவானின் உயிரை எடுத்துக் கொண்டுச் செல்வது தெரிந்தது. 

அம்பாளின் அருளினால் யமனைப் பின் தொடர்ந்த சாவித்திரியிடம் நான் எடுத்துச் செல்லும் உயிரைத் தவிர யாரும் என்னுடன் வரக்கூடாது என யமன் சொல்லியும் ஏதேதோ பேசிக் கொண்டே சாவித்ரியும் உடன் சென்றாள். சாவித்ரியின் வேண்டுகோளைக் கேட்ட யமன் சத்யவானின் உயிரைத் தவிர வேறு 3 வரங்கள் கொடுப்பதாகக் கூற, என்னுடைய தாய் தந்தையர் நாட்டை ஆள ஒர்மகனும், மாமனார் மாமியார் இழந்த பார்வையை மீண்டும் பெற்று ராஜ்யத்தை ஆள வேண்டும் எனச் சொல்லி மூன்றாவதாக எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்றாள்.

மூன்று வரங்களையும் சிறிதும் யோசியாமல் அளித்த யமன் இன்னும் ஏன் என் பின்னால் வருகின்றாய் எனக் கேட்க, தர்ம சீலரே, வாக்குத் தவறாத உத்தமரே நீங்கள் வாக்களித்தபடி கற்புடைய மகளிரின் உத்தம குணப்படி என் கணவருடன் வாழ்ந்தால் தானே எனக்கு குழந்தை பிறக்கும். ஆனால் என் கணவரின் உயிரை நீங்கள் கவர்ந்து செல்கின்றீர்களே என்றாள். அப்போது தான் தான் யோசியாமல் வாக்களித்து விட்டது புரிந்த யமன் வாக்குத் தவறாமல் இருக்க சத்தியவானின் உயிரை திரும்பி அளித்தான்.
 



Leave a Comment