திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய  பக்தர்களுக்கான அனுமதி தடைசெய்யப்பட்டது. இதேபோல் காரைக்கால் அருகிலுள்ள திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கும்  பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டது. கோயில் திறந்து இருந்தபோதிலும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்த போதிலும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் 70 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் வருகை தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து இன்று காலை முதல் காரைக்காலில் உள்ள வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனத்திற்காக  பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன்படி இன்று காலை முதல் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட அறிவுரைகளும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதனை பின்பற்றி பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகமும் , சனீஸ்வர பகவான் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று காலையில் கோயில்  திறக்கப்பட்டதும் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ சனீஸ்வர பகவான் சந்நிதியில் வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு ,உலக மக்கள் அனைவரும் நீண்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமலும் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்யப்பட்டது.  பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படவில்லை. 

நீண்ட நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது பல தரப்பு மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.
 



Leave a Comment