அதிசயங்கள் நிறைந்த விருபாட்சர் கோயில்


இந்தியாவில் பல முக்கிய திருத்தலங்களில் பலவிதமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், நிழல்படாத கோயில் கோபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இந்தத் திருக்கோயிலின் கோபுர நிழலானது தலைகீழாக விழுகின்றதாம்... என்னே ஆச்சரியம்! விடை தெரியாத மர்மமாகத் தான் உள்ளது.

கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் தான் உள்ளது இந்தப் பிரம்மாண்டமான விருபாட்சர் கோயில். விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.

விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகம். ஆனால், கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவன் சிலையோ 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதனால், இந்தக் கோயில் கட்டி எழுப்பிய பிறகு ஆண்ட மன்னர்கள் கோயிலை இன்னும் பிரம்மாண்டப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் இருந்தே ஹம்பி நகரத்தில் பல படையெடுப்புகள் நடத்தப்பட்டதால் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டதாம். இந்தக் கோயில் பல ஆண்டுகளாக விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டதாம். இந்தியாவின் பழமையான கோயிலும் இதுதான்.

 கோயிலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோபுரம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 160 அடி உயரத்தைக் கொண்டது. 1565-ல் இந்த நகரம் முழுவதும் அழிந்தபோது கூட, இந்தக் கோயில் அழியாமல் இருந்ததோடு, கோயிலில் நடைபெறும் வழிபாடுகளும், ஆராதனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

ரங்க மண்டபத்தைச் சுற்றி சிறு சிறு கோயில்கள், தூண் மண்டபங்கள் என அனைத்து அம்சங்களும் அழகாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் மத்தியில் இருக்கும் ரங்க மண்டபத்தின் கோபுர நிழலான ஒரு அறையில் தலைகீழாக தெரிகிறது. இதுதான் இந்தக் கோயிலின் உச்சக்கட்ட சிறப்பு. இதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் பலகாலமாக நடப்பட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. கோயிலின் கோபுரத்திற்கும் நிழல் விழும் தூண் மண்டப அறைக்கும் இடையே ஒரு துவாரம் இருப்பதால் அந்தத் துவாரம் வழியாக வரும் பிம்பம் தலைகீழான பிரதிபலிப்பை தருகிறது. இப்படியொரு விளக்கம் ஒரு சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டாலும், அந்தத் துவாரம் கோபுரத்தின் பிம்பம் செல்லும் வழியில் இல்லை என்று வேறுசில அறிஞர்களால் சொல்லப்பட்டது.

அதனால், கோபுரத்தின் நிழலானது தலைகீழாக விழுவதற்கான காரணம் என்ன என்பது விடை தெரியாத மர்மமாகத்தான் உள்ளது. இந்தியாவின் மர்மமான கோயிகளில் ஒன்றான இந்த விருபாட்சர் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுவதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோயிலில் குவிந்து வருகின்றனர். அதோடு, கோயிலின் வடிவமைப்பு ராமாயணம், மகாபாரதத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் கோயிலின் கலைநயத்தை பார்த்து வியப்புடன் செல்கின்றனர். இந்தக் கோயில் இந்திய கலாசார பண்பாட்டுக்கு எடுக்காட்டு என யுனெஸ்கோவால் புகழாரம் சூட்டப்பட்டது.

பல இடிபாடுகளுக்குக்கிடையே சிக்கி தற்போது அழகாகக் காட்சியளித்து வரும் இந்த விருபாட்சர் கோயிலில் டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், வருடாந்திர ரத திருவிழா பிப்ரவரி மாதத்தில் இங்குச் சிறப்பாக நடத்தப்படுகிறது.
 



Leave a Comment