கொல்லிமலை ரகசியங்கள்....


கொல்லிமலை..., தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர். தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த மலைகளில் கொல்லிமலையும் ஒன்று. நாமக்கல் அருகிலுள்ள கொல்லிமலையில்தான் எல்லா சித்தர்களும் யோகம், ஞானம், மருத்துவம் போன்ற அரிய கலைகளை சிவபெருமான் தலைமையில் நந்தி தேவரிடம் பயிற்சி எடுத்தனர் என்பர்.

1000 முதல் 1300 மீட்டர் உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி. 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.

அடுக்கடுக்காக அமைந்திருக்கும் இந்த மலையின் நடுவில் ஒரு அருவி பாய்ந்தோடுகிறது. இந்த அருவி எங்கிருந்து வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்தக் கொல்லிமலையில்தான் 18 சித்தர்களும் சிவபெருமானை குருவாக ஏற்றுச் செய்த குருமுப்பு என்ற மருந்தைத் தயாரித்தார்கள்.

இந்த மலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. இதனால் கொல்லி மலையை மூலிகை மலை எனவும் அழைப்பார்கள். முப்பு மருந்து நரை, திரை, மூப்பை மாற்றும் வல்லமை பெற்றது. இந்தக் குருமுப்பு மருந்தின் ஒரு பகுதியை 18 சித்தர்களும் தங்கள் மருத்துவப் பணிக்கு எடுத்துக்கொண்டு மீதியைக் கொல்லிமலையிலேயே அரங்கப்பம்மன் கோயில் அருகில் சித்தர்களின் தவசக்தியால் ஒரு பெரும் பள்ளத்தில் வைத்து அதன்மேல் பெரும் பாறையை மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கான அடையாளமாக அந்தக் கோயிலின் முன் குறியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு மருந்துக்குக் காவலாக நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களைக் காவல் இருக்கப் பணித்தனர்.

அதன் அடையாளமாகக் கிழக்குப் பக்கம் கருப்பண்ண சாமி சிலையும் மேற்குப்பக்கம் மாசி சின்னண்ணசாமியும், தெற்குப் பக்கம் கொல்லி யம்பாவையும், இதற்கு நடுவில் எட்டுக்கை காளியும் இருந்து காவல் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களை இன்றும் மக்கள் பக்தியுடன் வழிபடுகின்றனர்.

கொல்லிமலையில் 18 சித்தர்கள் வாழ்ந்து தவம் செய்துள்ளனர் என்பதற்கு அடையாளமாக கோரக்கர் குகை, ஔவையார் குகை, பாம்பாட்டிச் சித்தர் குகை, கோரக்கர் யாக குண்டம் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்த அடையாள இடங்கள் உள்ளன.

கோரக்கர் குண்டத்தில் காடை சம்பா அரிசி, கருங்குருவை அரிசியில் நெய் பொங்கல் வைத்து கரும்பு, வெல்லம் வைத்துப் படைத்து பக்தியோடு யாகம் செய்து பிறகு சிறிது தூரத்தில் உள்ள கூட்டாற்று மூலையில் தங்கினால் இன்றும் அன்று இரவு சித்தர்கள் ஜோதி ரூபத்தில் காட்சி தருவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

கொல்லிமலையில் ஆயிரக்கணக்கான மூலிகைகள் இருந்தாலும் குறிப்பாக, சிறப்பான மூலிகையான முடவாட்டுக்கால் அதிகம் தென்படுகின்றன. இந்த மூலிகை மண்ணில் வளராது. பாறைகளின் மேலும், மரங்களின் மேலும் படரும் ஒட்டு இனத்தைச் சேர்ந்தது. அதன் இலையே காய்ந்து சுருண்டு அதன்மேலே கவசம்போல் ஒட்டிக் கொள்ளும். இந்த மூலிகை காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது.
 



Leave a Comment