சித்ரா பவுர்ணமி கொண்டாடப்படுவதன் காரணங்கள்
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று தான் சித்திர குப்தன் அவதரித்ததாக கருதப்படுகிறது. எனவே அன்றைய தினம் சித்திர குப்தர் வழிபாடு முக்கியமானதாகிறது. சித்திர குப்தர் தோன்றிய கதை கீழ்வருமாறு.
முன்னொரு சமயம் பார்வதி தேவி அழகான ஆண்குழந்தை ஓவியத்தை வரைந்தார். அதனைப் பார்த்த சிவபெருமான் அவ்வோவியத்திற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் அவர் சித்திர குப்தன் என்று அழைக்கப்பட்டார் எனவும், இந்திரன் குழந்தை வேண்டி சிவபெருமானை வணங்கும் போது அவர் இந்திரனின் குழந்தை காமதேனு மூலம் கிடைக்கும் என்று அருளினார்.
சிவபெருமானின் கூற்றுப்படி காமதேனுவின் கருவிலிருந்து சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரத்தில் சித்திர குப்தன் தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. அவர் அறிவில் சிறந்து விளங்கினார். எனவே எமதர்மனின் உதவியாளராக உலக உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை கணக்கிட்டு கொடுக்கும் பொறுப்பை ஏற்றார் எனவும் கூறப்படுகிறது.
இந்திர பூஜை
முன்னொரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும் தேவர்களின் குருவான பிரகஸ்பதிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. அதன் காரணமாக பிரகஸ்பதி இந்திரனுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை ஏதும் வழங்கவில்லை. இதனால் இந்திரன் தீய வழியில் சென்றான்.
இறுதியில் தன் குற்றங்கள் குறைய வழிகாட்டுமாறு தேவ குருவை வேண்டினான். அதற்கு அவர் பூலோகம் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானை வழிபடுமாறு வழிகாட்டினார். அதன்படி தீர்த்தயாத்திரை மேற்கொள்ளும்போது தன் தோளில் இருந்து பாரம் இறங்குவது போல பாவங்கள் நீங்கியதாக உணர்ந்தான்.
உடல் மாற்றத்திற்கான காரணத்தை கண்டறிய முற்பட்ட போது அருகே சிவலிங்கத்தை கண்டான். சிவலிங்கத்திற்கு இந்திரன் விமானத்தை அமைத்து அருகே உள்ள குளத்தில் பூத்திருந்த பொற்றாமரையால் சிவனை வழிபட்டான். இவ்விடமே பின்னாளில் மதுரை என வழங்கலாயிற்று.
இந்திரன் வழிபட்ட நாள் சித்திரை மாத பவுர்ணமியாகும். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று இரவு இந்திர பூஜை விழா நடத்தப்படுகிறது. இந்திரன் இவ்வழிபாட்டில் கலந்து கொள்வதாக கருதப்படுகிறது.
Leave a Comment