வளமான வாழ்வு தரும் சங்காபிஷேகம்!
சங்கு...., செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
ஜோதிடத்தில் சங்கு
ஜோதிடத்தில் கடலும் கடல் சார்ந்த பொருட்களுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும்.
மாத்ரு காரகன், மனோ காரகன் என்றெல்லாம் ஜோதிடத்தில் சிறப்பிடம் பெற்ற நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சந்திரன் மகாவிஷ்ணுவின் மனதிலிருந்து பிறந்ததாகவும் (சந்த்ரமா மனஸோ ஜாத: - புருஷ ஸூக்தம்), பாற்கடல் கடைந்த போது தோன்றியதாகவும் அறியமுடிகின்றது. பெரும் தவம் செய்து கிரஹ பதவி பெற்றவர் சந்திர பகவான்.
சங்கின் மகத்துவம்
சங்கு, ஹரியின் இருப்பிடம். பணத்தைக் கொண்டுவரும். சங்கு தீர்த்தம் பற்றி பத்ம புராணம் விரிவாகக் கூறுகிறது. சங்கில் பாலை நிரப்பி இறைவனை நீராட்டினால் ஆயிரம் யாகங்கள் செய்த பலனை அடையலாம். கங்கை நீரை நிரப்பி அபிஷேகம் செய்தால் பிறவிப் பிணியை அறுக்கலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றது. இது கடலில் விளையும் பொருள். சங்கு பூச்சியின் கூடு. இவற்றில் சிறியது கடுகை ஒத்ததாகவும் பெரியது ஒரு அடிக்கு மேலும் உள்ளன. சங்கானது ஏரி, கடல், ஆறு, குளங்களிலும் வளரும்.
சங்குகளின் வகைகள்
மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு வலம்புரி சங்கு எனப் பல வகைப்படுகிறது. திருப்பதி திருமலை வேங்கடேச பெருமாள் கையில் இருப்பது மணி சங்கு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமியின் கையில் இருப்பது வைபவ சங்கு. திருக்கண்ணபுரம் ஶ்ரீ செளரிராஜ பெருமாள் கையில் இருப்பது துயிலா சங்கு. திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கையில் இருப்பது பாருத சங்கு.
Leave a Comment