அள்ள அள்ள செல்வம் தரும் அட்சய திருதியை திருநாள் 


தமிழ் மாதத்தில், சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திருதியை திதி ‘‘அட்சய திருதியை’’ என போற்றப்படுகிறது. ‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திருதியை நாள்.

சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திருதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர். யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். 

தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான்! தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியை நாள்.
 



Leave a Comment