பிறந்தது சார்வரி தமிழ் புத்தாண்டு....


சார்வரி தமிழ் புத்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இரவு 8.23 மணிக்கு பிறந்தது. தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வருவது சித்திரை மாதம். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தார். சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக அவதாரம் எடுத்தார். சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும். சித்திரை முதல்நாளில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

புத்தாண்டு தினத்தில் வாசலில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம். கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும். காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

காலையில் நம் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்ய முடியாதவர்கள் பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.

மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும். வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை சொல்லும் வகையில் இந்த உணவை சாப்பிடலாம். 
 



Leave a Comment