மந்திராலய மகானை தரிசிப்போம்


“பூஜ்யாய  ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச 

 பஜதாம் கல்பவ்ருட்சாய நமதாம் காமதேனவே”

“சத்தியமும், தர்மமும்,பக்தியும் உண்மையானால் ,ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் கேட்பது கிடைக்கும்”            

 உலக ஷேமத்தின் பொருட்டு யுகங்கள்தோறும் மகான்கள் அவதரிக்கிறார்கள்.இறைவனே தன்னுடைய அடியவர்களுக்காக மகான்களாக அவதரிக்கிறார்.

அப்படியாக, கலியுக கல்பக விருட்சமாகவும்,கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் காமதேனுவாக ராகவேந்திர சுவாமிகள் அவதரித்தார். தன்னை நோக்கி வரும் அபயக் குரலுக்கு  ஓடோடி வந்து அருள் புரியும் அந்த மந்திராலய மகானைப் பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டாமா?.           

 தான் பெற்ற எண்ணிலடங்கா வரத்தினால் மக்களை வாட்டி வதைத்த , இரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ய பகவான் எடுத்த அவதாரம் தான் நரசிம்மாவதாரம்.  இந்த அவதாரத்திற்கு முக்கிய காரணகர்த்தாவான பிரஹ்லாத ராஜனின்  மறுபிறவியே ஸ்ரீ வ்யாசராஜர்  எனப்படுகிறார். அவரின் மறுபிறவியே ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள். துங்கபத்ர நதிக்கரையில் அமைந்துள்ள புண்ய க்ஷேத்ரமான மந்திராலயத்தில் இந்த மகானின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் சிறந்த வீணா வித்வானாகவும், சிறந்த கவிஞராகவும் விளங்கியவர் கிருஷ்ண பட்டர். கர்நாடக மாநிலத்து மாத்வ பிராமணரான  இவரது மகன் கனகாசலபட்டரும் ,சங்கீதத்திலும் சாஸ்திர ஞானங்களிலும் சிறந்து விளங்கியவர்.

தன்னுடைய மூதாதையரைப் போலவே ,கனகாசல பட்டர் தம்பதிகளுக்குப் பிறந்த திம்மண்ண  பட்டரும்  கல்வி கேள்விகளிலும்  வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார்.

ஆனால் தன் மூதாதையரைப் போல் இல்லாமல் ,திம்மண்ண பட்டரால்  அரசவையில்  சிலகாலமே இருக்க முடிந்தது. 1565-ல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரினால் ஏற்பட்ட அழிவினால் விஜயநகரத்தை விட்டு  திம்மண்ண பட்டர் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறி கும்பகோணம் ஸ்ரீமடத்தில் சேர்ந்தார்.  தனது மகளின் திருமணம் மற்றும் மகன் குருராஜனின் உபநயனம் முடித்து  தம்பதிகள் இருவரும் ஸ்ரீனிவாசனை தரிசிக்க திருமலை சென்றனர். தங்களின் இந்த தனிமைத்துயர்  நீக்க ஒரு மகன் வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தித்தனர்.

இவர்களின் கனவில் தோன்றிய மலையப்ப தெய்வம்,உலகமே போற்றும் உத்தமனே அவர்களுக்கு மகனாகப் பிறப்பான் என்று வரமருளினார் .

 திம்மண்ணரின் மனைவி கோபிகாம்பாள் கர்ப்பவதியானாள். கி.பி.1595ஆம் ஆண்டு குருவாரத்தில், மிருகசீரிஷ  நட்சத்திரத்தில் காண்பவர் வணங்கத்தக்க தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
 



Leave a Comment