நவகிரக தோஷம் போக்கும் காஞ்சி காமாட்சியம்மன்.....


காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். அவளது மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்; கீழிரு கரங் களில் கரும்புவில், புஷ்பபாணம் ஏந்தியருள்கிறாள். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த ஸ்ரீசக்ரத்தில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை தேவியின் வஸின்யாதி வாக்தேவதைகள் வீற்றருள்கின்றனர். மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சாந்தமான காமாக்ஷியாக ஆதிசங்கரர் சாந்தப்ப டுத்தினார். 

இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். கோயிலின் உள்ளே பிராகாரங்களும், தெப்பக்குளமும், நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கருவறை கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம்.

ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒட்டியாண பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில். 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான கள்வர் சந்நதியும் இங்கு இருப்பது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்த லஹரி பாடினார். அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று. மூல கருவறையில் காமாட்சி அமர்ந்த நிலையில் அருள, உற்சவ காமாட்சி நின்ற நிலையில் இரு புறங்களிலும் லட்சுமி, சரஸ்வதியோடு தரிசனம் அளிக்கிறாள். 

இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பா நதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. ஆதிசங்கரருக்கு இக்கோயிலில் தனிச் சந்நதி உண்டு. 

உற்சவ காமாட்சி ஆலயத்தை விட்டு வெளியே ஊர்வலம் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் ஆதிசங்கரர் சந்நதியில் நின்று அனுமதி கேட்டு விட்டே செல்வதும், வருவதும் இத்தல அற்புதம். இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி,  பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும். இத்தலத்து அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதனால் காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவகிரக தோஷம் ஏற்படுவதில்லை.



Leave a Comment