சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இரண்டாவது நாளான இன்று சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று நிறைவு பெறும் விதமாக மூன்று நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அவ்வாறு நேற்று வசந்தோற்சவம் தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று காலை சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி கொடிமரத்தை ஒரு சுற்று வலம் வந்து கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
வழக்கமாக வருடாந்த வசந்த உற்சவத்தின் இரண்டாவது நாள் தங்க ரதத்தில் உற்சவ மூர்த்திகள் நான்கு மாடவீதிகளில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படி கோயில் பின்புறம் உள்ள வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்று அங்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சுவாமிக்கு நடைபெறக்கூடிய உற்சவங்கள் அனைத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அதிகாரிகள் மட்டும் பங்கேற்று நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக தங்கரதம் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு சர்வ பூபால வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு திருமஞ்சனம் மேற்கொண்டனர்.
இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Leave a Comment