நோய் தீர்க்கும் தெய்வங்கள்- விரிவான தகவல்கள்


 

நோய் தீர்க்கும் தெய்வங்கள்- விரிவான தகவல்கள்
பொதுவாக எல்லா தெய்வங்களும் மக்களை நோய்களிலிருந்து மீட்டு அவர்களை நல்லபடியாக வைத்திருப்பதையே விரும்புகின்றன. எனினும் குறிப்பிட்ட சில வியாதிகளுக்குக் குறிபிட்ட சில தெய்வங்களை வழிபடுவது கூடுதல் பலனைத் தரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள். தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சரிசிமாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலைவலியும் நீங்கிவிடும். 
சிவகங்கை  நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத்  தீர்த்தருள்கிறாள்.கோவை பெருமாநல்லூரில் கோயில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன், சருமத்தில் ஏற்படும் நோய்களை நீக்கியருள்கிறாள். 
திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை, குழந்தை பிறப்பில் உள்ள தடைகளை நீக்கி,  குழந்தை வரம் தருகிறாள். 
சென்னை - திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
திருச்சி - பெரம்பலூர், சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து காக்கிறாள். உடலின் எந்த பாகத்தில் நோய் ஏற்பட்டாலும் இந்த அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு, ஆலயத்திலேயே மாவிடித்து, மாவிளக்கேற்றி, ஆலய பிராகாரத்தில் படுத்து அந்தந்த உடல் பாகத்தில் மாவிளக்கை வைத்து வேண்டிக்கொள்ள அந்த நோய்கள் மாயமாய் மறைந்து விடும்.  
கோவை  மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. செய்வினை, பில்லி சூனியம் போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இத்தல தேவியை தரிசித்து நலம் பெறுகிறார்கள்.  ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் நம்புநாயகி அம்மன் திருக்கோயில் கொண்டுள்ளாள். இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள திருக்குள தீர்த்தங்கள் பல்வேறு நோய்களைப் போக்கும் தன்மை கொண்டவை. எனவே சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என அழைக்கப்படுகிறது. அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள்.
சென்னை - மயிலாப்பூர் கச்சேரி சாலை பகுதியில் உள்ள முண்டகக் கண்ணியம்மன், கண்நோய்களை நீக்குவதில் நிகரற்றவளாக விளங்குகிறாள். திண்டுக்கல் - நத்தத்தில் உள்ள மாரியம்மன் உடல் ரீதியான எல்லா பிணிகளையும் தீர்த்தருள் புரிகிறாள். அன்னையின் அருளால் பலன் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டுதல், தீச்சட்டி எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 
நவபாஷாணத்தால் ஆன அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சியில் தரிசிக்கலாம். தீராத நோய்களையும் இந்த தாய் தீர்த்தருள்கிறாள். நாமக்கல் - ராசிபுரத்தில் உள்ள நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு கண் மலர் வாங்கி சாத்தினால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
விஜய ஜெய சாமுண்டீஸ்வரி எனும் பெயரில் தவக்கோல அம்பிகையை கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் தரிசிக்கலாம். இந்த அம்பிகை மன அமைதி தந்து காப்பவள்.  கோயமுத்தூரில் அருளாட்சி புரிந்து வரும் கோனியம்மன் தீராத நோய்களை தீர்த்தருள்பவள் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
தஞ்சாவூர், வல்லத்தில் ஏகெளரி அம்மன் அருள்கிறாள். இந்த அம்பிகை தன் பக்தைகளின் கணவர்களை நோய்களில் இருந்து காப்பதில் வல்லவள். அதனால் பயன்பெற்ற பக்தைகள் ஆலயத்திற்கு எருமைக்கன்றை தானமாக வழங்குகின்றனர். மேலும் குழந்தைப் பேற்றில் தடை உள்ள பெண்கள் இந்த அம்பிகையின் சந்நதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை அருந்த அன்னையின் அருளால் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறது. 
சென்னை - மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கோயில் கொண்டுள்ள கடும்பாடிச் சின்னம்மனிடம் உப்பு மிளகு வாங்கி செலுத்துவதாக பிரார்த்தனை செய்தால் சரும நோய்கள் நீங்குகின்றன. அம்மை நோய் நீங்க ஆலயத்தின் கருவறையில் வழங்கப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாய் அமைகிறது. 
திருக்கருகாவூரில் அருளும் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பப் பை சம்பந்தமான பிணிகளை நீக்கியருள்கிறாள்.  திருவண்ணாமலை  சந்தவாசலில் கங்கையம்மன் அருள்புரிகிறாள். இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்த நீர் தீராத நோய்களை தீர்க்கிறது. 
தூத்துக்குடி வசவப்பபுரத்தில் அலங்காரச்செல்வி அம்மன் அருள்புரிகிறாள். கனவுத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து, அதிலிருந்து விடுபடுகின்றனர். 
மூலஸ்தானத்தில் மாரி, காளி என இரு அம்பிகைகள் வீற்றருளும் தலம், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சந்தைக்கடை மாரியம்மன் கோயில். கண் நோய்களையும் கொடிய நோய்களையும் இந்த இரட்டை அம்பிகைகள் தீர்க்கிறார்கள்.



Leave a Comment