தடைகளை தவிடுபொடியாகும் கொம்பநாயக்கன்பாளையம் முருகன் 


ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, கொம்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில் தோன்றி,  ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு!’ என்று கூறினார். 

அடுத்த  நாளே ஆலயம் கட்டும் பணியில் இறங்கினார் குப்பண்ணன். அப்போதைய ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த  ஆங்கிலேய அதிகாரிக்கு திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது. 

தன் தவறை உணர்ந்த அவர் குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின. அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச் சேர உதவினார். அந்த பாலதண்டாயுதபாணி, இன்றும் பக்தர்களுக்கு நேரும் தடைகளை எல்லாம் விலக்கி அவர்கள் வாழ்வில் இனிமை சேர்க்கிறார் - குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கே ‘சுயம்வரா பார்வதி யாகம்’ நடத்தப்படுகிறது.

இதில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்து கொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமணம் 48 நாட்களில் நிச்சயமாகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும் அன்னதானமும் நடத்தப்படுகின்றன. 

இங்கே தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் நலம் பெறுகிறார்கள். வேலை மாறுதல் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். யாக பூஜையில் கலந்துகொள்ள வருபவர்கள் கால் கிலோ உதிரிப்பூவும், இரண்டு முழம் பூச்சரமும், ஓர் எலுமிச்சம் கனியும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
 



Leave a Comment