சந்திரன் தட்சனிடம் பெற்ற சாபம்....
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .
தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், 'மூன்றாம் பிறையாக' அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
சந்திரனின் அகந்தை:
"தான் பெரியவன்" என்று அகந்தையோடு நினைப்பது தவறு. அது மிகப்பெரிய அழிவை உணர்த்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன் காணப்படுகின்றான். இதனால் தான் வளர்பிறையில் எந்த காரியம் தொடங்கினாலும் அந்த காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.
சந்திர தரிசனம்:
சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி "சந்திர மௌலீஸ்வரராக" காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.
Leave a Comment