நெல்லை திருப்பதி கோயில்


நெல்லை மாவட்ட கோயில்கள்

நெல்லை திருப்பதி கோயில்
பக்தர்களுக்கு அருள் பாலிப்பதில் கருணையே வடிவானவர் சீனிவாசன்.  தம் பக்தர்களின் துன்பங்களை போக்கி ஆனந்தம் கொள்பவர். கலியுகத்தில், தம் பக்தர்களைக் காக்க வேண்டி மானுட ரூபத்தில் பூலோகம் வந்தார்.  புராணப் பெருமை வாய்ந்த தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறப்புமிகு நகரான திருநெல்வேலியில் எழுந்தருளினார்.  அங்கிருந்தவாறே பக்தர்களின் துன்பங்களை போக்கி வந்தார்.  
 மானுட ரூபத்தில் வந்திருப்பது வைகுண்டவாசியான மகாவிஷ்ணு என்பதை உணர்ந்த அங்கிருந்த ரிஷிகள், சித்தர்கள் அனைவரும் தினமும் சென்று சீனிவாசனை வணங்கி வந்தனர்.  அவர்களுள் ‘சந்நியாசி’ என்ற பெயர் கொண்ட மகானும் ஒருவர்.
 இந்நிலையில், தம் பூலோகப்பணியை முடித்துக்கொண்டு வைகுண்டம் கிளம்ப ஆயத்தமானார் சீனிவாசன்.  இதனையறிந்த மகான் சந்நியாசி, ‘அப்பனே! நீ வைகுண்டம் சென்றுவிட்டால் இம்மனித குலத்தை எவர் காப்பாற்றுவர்?  நீ இத்தலத்திலேயே தங்கியிருந்து அனைவரையும் காக்க வேண்டும். இக்கலியில் உன்னுடைய  அருள்பார்வை  இம்மானிட குலத்துக்குத் தேவை!” என்று தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.  தம்மிடம் மிகுந்த அன்பு கொண்ட சந்நியாசியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மானுடனாக வாழ்ந்த பகுதியிலேயே கோயில் கொண்டார் சீனிவாசன்.  அந்த இடம் மகானின் பெயரால் ‘சந்நியாசி’ கிராமம் என்றே அழைக்கப்பட்டது.  புராணப்பெருமை மிக்க இந்தக் கோயில், திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கல்திருப்பணி ரீதியாக 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோயில்.  மானுடர்களின் பாவங்களைப் போக்கி, வேண்டும் வரம் அருள்வதாேலயே ‘வேங்கடாஜலபதி’ எனும் திருநாமத்துடன் வைகுண்டபதி இங்கு வீற்றிருக்கிறார்.  திருமலை திருப்பதிபோலவே மூலவர் மேலுள்ள விமானம் ‘ஆனந்த விமானம்’ என அழைக்கப்படுகிறது.  தாயாரும் ‘அலர்மேல் மங்கை’ எனும் திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார்.  எனவே, இத்திருத்தலம் ‘தென் திருப்பதி’ என அழைக்கப்படுகிறது. 
 அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் அருளும் அலர்மேல் மங்கையின்  இடப்புறத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர், கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார்.  ஒரே நேரத்தில் வேங்கடாஜலபதி, தாயார், பஞ்சமுக ஆஞ்சநேயர் மூவரையும் இங்கு தரிசனம் செய்யலாம்.
வலது மார்பில் ஸ்ரீதேவி, இடது மார்பில் பூதேவி வீற்றிருக்க, சங்கு சக்கரதாரியாய் இடுப்பில் சந்திரவம்ச உடைவாளுடன் கூடிய ஒட்டியாணம், மேனியில் சப்தகிரி, லட்சுமி, துளசி, தாமரை, செண்பக மாலைகளை அணிந்து அருள்பாலிக்கிறார் சீனிவாசன்.
 இங்குள்ள உற்சவர் திருநாமம், சீனிவாசன்.  எனவே ‘கல்யாண சீனிவாசப் பெருமாள் கோயில்’ என்றே இவ்வாலயம் அழைக்கப்படுகிறது.  இங்கு சீனிவாசரை வழிபடுவோருக்கு திருமணத்தடை அகன்று சிறந்த வாழ்க்கைத்துணை அமைகிறது; சத்புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.  திருமணம் கைகூடியவர்கள் கல்யாண உற்சவம் நிகழ்த்தியும், உத்தியோகம், உயர் பதவி வேண்டுவோர் கருட சேவை செய்தும் வழிபடுகின்றனர்.  
 திருப்பதிக்குச் சென்று தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற இயலாதவர்கள் இங்கு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.  



Leave a Comment