கண்ணப்ப சுவாமிகள் நினைவாலயம் மகா கும்பாபிஷேகம் 


இறைவனின் முழுநிறைவான திருவருள் கிட்டப் பெற்றவர்களே சித்தர் என்று ஆகிட முடியும். இந்தப் புது நாகரிகக் காலத்திலும் இறைப் பேரருளால் சித்தர்கள் தோன்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை நடுவண் சிறை அமைந்த புழல் பகுதியின் காவாங்கரையில் மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள் தோன்றி பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். 

தன்னை நாடி வரும் அன்பர்கள் தமது குறைகளைச் சொல்வதற்கு முன்பே அதை அறிந்து நீங்கியதன் காரணமாக அன்பர்கள் அவரது தீவர பக்தர்கள் ஆயினர். சட்டி சித்தர் என்ற பெயர்க் காரணம் சித்தர் கன்னிமார் எழுவரை  தாயாக வரித்து அன்னபூரணியை ஏற்றிப் புகழ்ந்து அட்சய பாத்திரம் ஒன்றை வேண்டிப் பெற்றார்.  அந்த சட்டியில் இருந்து வேண்டிய அளவு உணவுப் பொருள்கள் குறைவில்லாது வந்து கொண்டே இருந்தன. அதனால் அன்பர்களுக்கு வயிறார உணவிடும் வழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் காரணமாக சட்டி சித்தர் என்ற பெயர் இவருக்கு உண்டாயிற்று.

1961 பிலவ ஆண்டு புரட்டாசித் திங்கள் மகாளய அமாவாசை அன்று அஸ்த நட்சத்திம் கூடிய திங்கட் கிழமை நன்னாளில் ஜீவ சமாதி ஆக வேண்டும் என்று எண்ணம் மேற்கொண்டவராக அடியவர்களிடம் அந்த நாளின் போது வந்து சேருமாறு பணித்தார். நீ மண்வெட்டி கொண்டு வா, நீ கூடை எடுத்து வா, திருமணத்திற்கு போக வேண்டும் பெரிய மாலை கொண்டு வா என்று சொன்னார். நான் சமாதி ஆகிவிட்டால் உடனே புதைத்து விடக் கூடாது. குழியிலேயே 41 நாள்கள் வைத்திருத்துவிட்டு 41 ஆம் நாள் நான் லிங்கமாக மாறிய பிறகு செய்ய வேண்டியவற்றைச் செய்யலாம் என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எவருக்கும் அப்போது விளங்கவில்லை. 

குறிப்பிட்ட அந்நாளில் எல்லோரும் வந்தாகிவிட்டது. அவர்களை கவனித்த கண்ணப்ப சுவாமிகளாகிய சட்டி சித்தர் ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள் என்றதும் பாட்டு பாடச் சொல்கிறார் என நினைத்த அன்பர்கள் பாடினார்கள். சித்தர் சின்முத்திரையுடன் அமைதி ஆனார். அப்போது தான் அடியவர்களுக்கு உண்மை விளங்கிற்று. உடனே கண்ணப்ப சுவாமிகள் இருக்கும் இடத்தில் குழி தோண்டி அவரை ஆகம முறைப்படி அமர வைத்தார்கள். 41 நாள்கள் குழியை மூடாமல் பலகை கொண்டு மூடி அதன் மேல் விளக்கை ஏற்றினார்கள். 41 ஆம் நாள் பலகையை எடுத்துப் பார்த்த போது சித்தர் லிங்க வடிவாய் ஆகி இருப்பதைக் கண்டனர். 

சுற்றிலும் மேடை அமைத்து முடித்தனர். அதன் மேல் பின்னாளில் கண்ணப்ப சுவாமிகளின் திருவுருவச் சிலை கிழக்கு நோக்கி பதிக்கப்பட்டது. இவரது சமாதி கோவிலில் அமாவாசை பௌர்ணமி நாள்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. கோவில் நாள்தோறும் காலை 6 மணி முதல் 12 மணி அளவும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகின்றது. 

சென்னையை அடுத்த காவங்கரைல் இருக்கும் ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள் நினைவாலயத்தில் வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 26 ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் தொடங்க இருக்கிறது. மாலை 6.30 மணி அளவில் யாகசாலை பூஜைகள், வேள்விகள் தொடங்குகிறது. 

27 ஆம் தேதி காலை 6.30 மணி அளவில் யாக சாலை பூஜைகள் புறப்பாடு நடைபெறும். காலை 8 மணி முதல் 9 மணி வரை மகா கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள்  நினைவாலயம் மகா கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்க முன் வரும் பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி....


மௌனகுரு பகவான் ஸ்ரீ கண்ணப்ப சுவாமிகள் அடியார் திருக்கூடம் 
காவாங்கரை, புழல் கிராமம், ரெட்ஹில்ஸ் அருகில். 
சென்னை - 600066

திரு.ரவீந்திரன் - 9940549176

திரு. பாஸ்கர் - 9444999763   

திரு. மோகன் - 9444178131



Leave a Comment