களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்
களக்காடு சத்தியவாகீசுவரர் கோயில்
களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்றும் வழங்கப் பெற்றது.
இராவணன் சீதையை கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன.
திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. இத்தலத்திற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு.
கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். மார்ச் மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். இங்கு தங்கும் விடுதிகளும் உள்ளன.
Leave a Comment