நூற்றாண்டு காணும் கல்லல் பெருந்தேர்
மனித வரலாறு நாகரிகங்களின் வழியாகத்தான் கடத்தப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு வரலாறு உண்டு என்பதுதான் சமூக அறிவியலும், படைப்பிலக்கிய கோட்பாடுகளும் சொல்லும் அழுத்தமான செய்தி.
தனி மனிதனுக்கே வரலாறு உண்டு எனும் போது, அவன் சார்ந்து வாழும் சமூகக் குழுவுக்கும் ஒரு வரலாறு இருப்பது இயல்புதானே!
அப்படி ஒரு வரலாற்றின் பதிவாகத்தான் ‘நூற்றாண்டு காணும் குன்னங்கோட்டை நாட்டாரின் பேருந்தேர்’ என்ற இந்த நூல் வெளிவருகிறது. ஒரு தேரின் வரலாறு என்பது, அந்த ஊரின், பகுதியின், பண்பாட்டின் வரலாறாகவும் இருப்பதை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
“குன்னங்கோட்டை நாடு” எனத் தொன்று தொட்டு அழைக்கப்படும் சிவகங்கைச் சீமையின் ஒரு பகுதிவாழ் மக்களின் பண்பாட்டுச் செறிவு மிக்க வரலாற்றை இந்த நூல் பேசுகிறது.
வேலும், வாளும் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த பண்டைக் காலத்தின் பண்பாட்டுச் சுவடுகள், தற்போதைய டிஜிட்டல் யுகத்திலும் உயிர்ப்புடன் பாதுகாக்கப்படுவதற்கும், கொண்டாடப்படுவதற்குமான அழுத்தமான வரலாற்றுப் பின்னணியை, இன்றைய தலைமுறைக்கு புலப்பட வைக்கும் கண்ணாடியாக இந்த நூலைக் காண முடிகிறது.
பண்டைத் தமிழர் வாழ்வில் குறுநிலத் தலைவர்கள் எப்படி தங்களுக்கென ஓர் அமைப்பு ரீதியான நிர்வாகக் கட்டமைப்பையும், நீதி பரிபாலனத்தையும் உருவாக்கிப் பராமரித்து வந்தனர் என்பதை “குன்னங்கோட்டை நாடு” என்ற குறிப்பிட்ட அந்த நிலப்பரப்பின் வரலாற்றில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
குன்னங்கோட்டை நாடு, அதற்காக கல்லல் சோமசுந்தரேஸ்வர் சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் உருவாக்கப்பட்ட தேர், அந்தத் தேரை உருவாக்கிய மதுரகவி ஆண்டவர் சுவாமிகள், அவர் நிறுவிய மடம், மதுரகவி ஆண்டவருக்கு சீடராக இருந்த வெள்ளாடைத் துறவியும், வேதாந்தியுமான, தமிழ் இலக்கணத்தில் பெரும் புலமை மிக்கவராக இருந்த சங்கத்து நாராயணசாமி - என வீரியமான நிலப்பரப்பின் வாழ்வு பற்றியும், அதை ஆக்கிரமித்திருந்த வேறுபட்ட ஆளுமைகள் பற்றியும் விரிவான தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
1920 ஆம் ஆண்டில், தன் சொத்தின் ஒரு பகுதியான ரூ.33,000 ஐ (இன்றைய இதன் நேரடி மதிப்பு சுமார் ரூ. 5 கோடி) தேர் செய்வதற்காக செலவழித்த மதுரகவி ஆண்டவரின் வரலாறு, திருப்பங்களும், உணர்வுமயமான நிகழ்வுகளும் நிறைந்த காவியத்தைப் போல படிக்கச் சுவையானதாக இருக்கிறது.
கீழடி போன்ற பண்பாட்டுச் சுவடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும், வேட்கையும் தமிழ்ச் சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கத் தொடங்கி இருக்கும் இன்றைய தருணத்தில், இதுபோன்ற பழந்தமிழர் வரலாற்றைச் சொல்லும் நூல் வெளி வருவது முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை கற்பகம் புத்தகாலயத்தின் வெளியீடாக வரும் இந்நூல், வரும் 07.03.2020 அன்று மாலை 7.00 மணிக்கு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கல்லலில், மாசிமகத் தேர்த்திருவிழாவின் போது வெளியிடப்பட இருக்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா இந்த நூலை வெளியிட, தமிழறிஞர்கள் பலர் வாழ்த்திப் பேச இருக்கின்றனர்.
(நூலைப் பெற விரும்புவோர் - கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, நடேசன் பூங்கா அருகில், தி. நகர், சென்னை – 17, தொ.பே: 044 – 24314347 – என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.)
Leave a Comment