மாசி மகத்தன்று புனித நீராடல் ஏன்?


மாசி மகம் என்பது மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது ‘கடலாடும் விழா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிறவி என்னும் பெருங்கடலில் அமிழ்ந்து கிடக்கும் மானிட ஆன்மாவானது இறைப் பரம் பொருளின் அருட் கருணை என்னும் ஆனந்த வௌ்ளத்தில் மூழ்கித் திளைத்தல் வேண்டும் என்பதனை குறிப்பால் உணர்த்தலே இவ்விழாவின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.  

இந் நன்னாளில் தான் உமையவள் தக்கனின் மகளாக அவதாரம் செய்தாள். மாசி மகத் தன்று தக்கன் தன் மனைவியாகிய வேதவல்லியுடன் யமுனை ஆற்றில் நீராடினான். பின் அவன் அந்நதியின் தாமரை மலரில் இருந்த வலம் புரிச் சங்கினைத் தொட அது பெண்ணாய்மாறிற்று.

இச்செயல் ஈசனின் திருவருளால் நிகழ்ந்தது என்பதனை உணர்ந்து அப்பெண்ணிற்கு தாட்சாயிணி எனப் பெயரிட்டு வளர்த்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்தநாளில் தான் திருமால்வராக அவதாரம் எடுத்து பூமியைக் கடலில் இருந்து  மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நாள் முருகனுக்கும் உரிய நாளாகும்.

இந்த நாளில் தான் முருகன் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார்.  எனவே சிவபெருமான், திருமால், முருகன் என்னும் முப்பெரும் கடவுளருக்கும் உரிய நாளாக இது போற்றப்படுகிறது. நதிகளில் நீராடல் என்பது தமிழரின் பண்பாடு சார்ந்தமரபே ஆகும். தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படும் தை நீராடல், மார்கழி நீராடல் என்பதனை ஈண்டு நினைவு கூறல் நலம்.

எனினும் இம்மாசித் திருநாளில் நீராடல் என்பதற்கு வருணனோடு தொடர்புடையகதை ஒன்று சொல்லப்படுகிறது. வருண பகவானுக்கு ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனால் அவர் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார். வருணன் செயல்பட இயலாது போகவே உலகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது . உலக உயிர்கள் சொல்லொண்ணாத் துன்பத்தினை அனுபவித்தன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்: அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இறைவன் வருணனை விடுவித்தார். வருணன் விடுதலை பெற்ற திருநாளே மாசி மகம் எனப்பட்டது.

விடுதலை பெற்ற வருணன் சிவபெருமானிடம் வரம் வேண்டினான். தான் கடலில் இருந்த காலத்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றமையால் தன்னைப் போன்று வழிபடும் அனைவரும் பிறவிப் பிணிகள் நீங்கி உயர்வு பெற வேண்டும் என்பதே அவ்வரம் ஆகும். இறைவனும் மகிழ்ந்து அத்தகைய வரத்தினை வழங்கினார்.

அதன் அடிப்படையிலேயே மாசி மகத்தன்று நீராடல் என்னும் நிகழ்வு தோற்றம் பெற்றது. அவ்வாறு நதியில் நீராடும் காலத்து ஒற்றை ஆடையுடன் நீராடல் கூடாது.  உடன் பிறிதோர் ஆடையும் அணிந்திருத்தல் வேண்டும் என நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன.  

ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை.  நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல், மேலும் சிறப்புடைத்தாம்.



Leave a Comment