வாழ்வியல் வெற்றிக்கு வழி காண்பித்த வள்ளுவரும், வள்ளலாரும்
தமிழாய்வு அறக்கட்டளை மற்றும் உலகத் தமிழியல் நடுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்போடு, திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (தன்னாட்சி) ஏற்பாடு செய்திருந்த "தமிழ்ப்பேராளுமைகளும் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல்களும் " எனும் கருத்துரை அரங்கம் நடைபெற்றது.
தமிழ்ப் பேராளுமைகளை மாணவ மாணவியர்களிடம் கொண்டு சேர்த்தும் முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பார்க்ஸ் கல்லூரியின் செயலர் மற்றும் தலைவர் முனைவர் டி.ஆர்.கார்த்திக் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் உரையாற்றிய பார்க்ஸ் கல்லூரியின் நிர்வாக அலுவலர் முனைவர் ம. இராஜாமணி, "வள்ளுவரின் எளிமையான பேருண்மைகள் மனிதனின் சிக்கல்களுக்குத் தீர்வு அளித்து வெற்றி பெற உதவக்கூடியவை. அதே போல, இந்திய அளவில் 45 சதம் பேருக்கு இன்றும் ஒரு வேளை மட்டுமே உணவு கிடைக்கும் நிலையை 150 ஆண்டுகளுக்கும் முன்னரே கணித்து, அதற்கு எளிய தீர்வு அன்னதானமே என உணர்ந்து வடலூரில் சத்திய ஞான தருமச் சாலை எனும் உணவளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் வள்ளலார் " என்று குறிப்பிட்டார்.
வாழ்த்துரை வழங்கிய, பார்க்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் சு. முருகவேல் அவர்கள், "வள்ளுவரையும் வள்ளலாரையும் எல்லாக் கால கட்டத்திற்கும் ஏற்றார்போல எடுத்துரைக்கும் இத்தகைய வாய்ப்பை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவர் காட்டிய பேரறிவு எனும் தலைப்பில் பேசிய மூத்த ஊடகவியலாளரும், வரலாற்று ஆய்வாளரும் , சக்தி ஆன்லைன் நிறுவனருமான திரு.கே.பார்த்திபன், "கோபம் தவிர்த்தல், ஊக்கம் பெறுதல் ஆகிய வள்ளுவரின் மிக எளிய அறிவுரைகள் கூட நம் வாழ்வில் அற்புதங்களை, நல்ல மாற்றங்களை, வெற்றிகளைக் குவிக்கும் வல்லமை கொண்டவை" எனக் கூறி வள்ளுவர் எப்படி எல்லாக் காலகட்டத்திற்கும் ஏற்ற அறிஞர் என்பதை விளக்கினார்.
முழுமையான வாழ்வியல் வெற்றிக்கு வள்ளலார் காட்டிய வழி எனும் தலைப்பில் பேசிய, உலகத் தமிழியல் நடுவத்தின் நிறுவனர் - செயலர் திரு.வளர்மெய்யறிவான், " மனிதர்களின் அன்றாட வாழ்வியலுக்கு மட்டுமல்ல, மனிதப் பிறப்பின் நோக்கம், இலக்கு, எல்லைக்கு வழிகாட்டியவர் வள்ளலார். நரை எனும் முடி நரைப்பது, மூப்பு எனும் வயதாவது, பிணி எனும் நோயற்று வாழ்வது, இறப்பு எனும் இறந்து போதலையும் தவிர்த்து பிறப்பற்றும் வாழ்வது எனும் சாகாக்கலையை செய்து காண்பித்தவர் வள்ளலார். இவை தவிர பெண் விடுதலை, சாதி மத எதிர்ப்பு ஆகியவற்றையும் வலியுறுத்தியவர். திருக்குறளைப் பொதுமக்களிடமும் கொண்டு சென்றவர் " எனக் குறிப்பிட்டார்.
நிகழ்வில், பார்க்ஸ் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சாமி சுந்தரம் வரவேற்க தமிழாய்வு அறக்கட்டளை நிறுவனர் சூலூர் திரு.சிவக்குமார் நன்றி நவின்றார்.
Leave a Comment