சிவராத்திரியின் புராண கதை
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிகை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார். தான் பூஜித்த இந்த இரவை, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களாலும், மனிதர்களாலும் இன்றும் சிவராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
சிவராத்திரி நாளில் பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள் ளதாக புராணங்கள் கூறுகின்றன. பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த போது பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று எண்ணிய சிவபெருமான், ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் தாங்கி நீலகண்டனாக மாறி உலகத்தை அழிவில் இருந்து காத்தது இந்த சிவராத்திரி நாளில்தான். அன்னை உமாதேவி ஈசனின் கண்ணை மூடியதால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான்.
சிவனின் இடபாகத்தினை அன்னை பார்வதி பெற்ற தினம் இந்த நாள்தான். சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான். பிரம்மா தனது படைப்புத் தொழிலை தொடங்கியது இந்த நாளில்தான்.
இந்திரன் தேவலோக அதிபதியாக மாறியதும் இந்த நாளில் தான். குபேரன் செல்வத்தின் அதிபதி யான நாளும் இந்த நாள்தான். கண்ணப்ப நயினார் சிவபெருமானுக்காக தனது கண்களை தானமாக அளித்ததும் இந்த நாள்தான். சிவபெருமான் தனது பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்த தினம் சிவராத்திரி.
Leave a Comment