திருப்பதியில் சேவை தரிசன பிரசாதங்கள் ரத்து செய்ய முடிவு?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாராந்திர மற்றும் தினந்தோறும் நடைபெறும் சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிரசாதங்களை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தற்போது வாராந்திர சேவையில் விசேஷ பூஜையில் 1 பெரிய லட்டு வடையும், அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் 2 பெரிய லட்டு, 2 வடை, சகஸ்கர கலசாபிஷேகத்தில் 1 பெரிய லட்டு, வடை, 2 அப்பம் , திருப்பாவாடா சேவையில் வடை, ஜிலேபி, முறுக்கு , வஸ்திரமும், அபிஷேக சேவையில் 2 லட்டு, 2 வஸ்திரம், நிஜபாத தரிசனத்தில் 2 லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
இதேபோல் தினந்தோறும் நடைபெறும் நித்திய சேவைகளான தோமாலை, அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையில் 2 சிறிய லட்டுகளும், கல்யாண உற்சவத்தில் 2 பெரிய லட்டுகள், 2 வடை மற்றும் 5 சிறிய லட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த சேவைகளில் பங்கேற்கும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு சிறிய லட்டு இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்களை முற்றிலும் ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரசாதங்கள் தேவைப்பட்டால் பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் விதமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த சேவைகளில் பங்கேற்பதற்காக ஏப்ரல் மாதம் வரை முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்படுவது போன்று பிரசாதங்களை வழங்கி மே மாதத்திற்கு முன் பதிவு செய்யக்கூடிய பக்தர்களுக்கு ஒரு சிறிய லட்டுகள் மட்டும் பிரசாதமாக வழங்கி மற்ற பிரசாதங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளும் விதமாக நடைமுறைக்கு கொண்டு வர தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய லட்டு பிரசாதத்தை லாபநோக்கில் பார்த்து பக்தர்களுக்கு பிரசாதங்களை ரத்து செய்து 1 லட்டு மட்டும் இலவசமாக வழங்கி மற்ற பிரசாதங்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என கூறுவது நல்ல முடிவு அல்ல என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தேவஸ்தானத்தின் இந்த முடிவை மீண்டும் மறுபரிசீலனை செய்து பழையபடியே சலுகை விலையில் லட்டு வழங்குவதையும் தற்போது சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்குவது போன்ற பிரசாதங்களை தொடந்து வழங்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Leave a Comment