மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  தெப்பத்திருவிழா.... 


உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மதுரையில் தைப்பூச தெப்பத்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்பத் திருவிழாவையொட்டி காலை, இரவு என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் கோவிலில் இருந்து புறப்பாடாகி சிந்தாமணியில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மதுரை தெப்பக்குளம் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டனர்.

 இறைவன் இறைவி மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் இன்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது. 

மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியதும், அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை வலம் வந்தனர். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடினர். 
 



Leave a Comment