வள்ளலார் ஜோதி தரிசனத்தின் சிறப்புகள்...
‘‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன்’’ என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வடலூர் வருவர்.
நிகழாண்டு, 149-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெல்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று சத்தியஞானசபையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. பின்னர் 7.30 மணிக்கு தர்மசாலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி ஆகிய இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.
அதன்பின், சத்தியஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சீர்வரிசை பொருட்களை கையில் ஏந்தியபடியும், வள்ளலார் பயன்படுத்திய பொருட்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்த படி ஊர்வலமாக ஞானசபை கொடிமரம் அருகே வந்தனர்.
இதையடுத்து 10.30 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர். பின்னர் வள்ளலார் எழுதிய கொடி பாடல்களை பாடியபடி கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அப்போது அங்குதிரண்டிருந்த ஏராளமான மக்கள் அனைவரும் வள்ளலாரை போற்றி கை கூப்பி வணங்கினர். கொடி ஏற்ற நிகழ்ச்சி முடிந்தவுடன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு பார்வதிபுரம் கிராம மக்கள் எடுத்துவந்த பழங்கள் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெறும். அதன் பின்னர் காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் ஒன்று கூடுவார்கள் என்பதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Comment