தைப்பூச விரத முறை ....


தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுநாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
 



Leave a Comment