சகல செல்வமும் தரும் ரதசப்தமி வழிபாடு...
சூரியனின் பிறந்தநாளை ரத சப்தமியாகக் கொண்டாடுகின்றனர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, “சப்தமி திதி’ என்கிறோம். தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடை பிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும்.
ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
சூரியனை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள்.
Leave a Comment