முருகப்பெருமான் ஞானகுருவாக அருளும் திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.
முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். சிவயோகி போல தலையில் ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.
இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதலில் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சந்நதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருட்டான பகுதியில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இதுதவிர முருகன் சந்நதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சந்நதி இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். திருச்செந்தூரில் முருகன் சந்நதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது, கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப் பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது ஒரு நாள் நள்ளிரவில் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
ஆதிசங்கரருக்கு ஏற்பட்ட காச நோய் இத்தலத்தில் நீங்கியது. எனவே அவர் சுப்ரமண்ய புஜங்கம் எனும் துதியை இம்முருகனைக் குறித்துப் பாடியுள்ளார். அதில் இத்தலத்தில் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் விபூதியை தரிசித்த மாத்திரத்திலேயே அனைத்து நோய்களும், பில்லி, சூன்யங்களும் பறந்தோடும் எனக் குறிப்பிட்டுள்ளார். தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக் கொண்டு மேள, தாளத்துடன் சென்று கடலில் கரைக்கின்றனர். இதனை, ‘கங்கை பூஜை’ என்கின்றனர்.
இங்குள்ள சரவணப்பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறு குழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப் பெண்கள் இருக்கும் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு, ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனிச் சந்நதிகள் இருப்பது சிறப்பு. இவர்களில் குமரவிடங்கரை “மாப்பிள்ளை சுவாமி’’ என்றழைக்கின்றனர்.
திருச்செந்தூரில் முருகன் ‘ஞானகுரு’வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், குரு தலமாகக் கருதப்படுகிறது. பிராகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கின்றன. அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, ஞானஸ்கந்த மூர்த்தி என்று அழைக்கிறார்கள்.
வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குருப் பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குருவினால் உண்டாகும் தீய பலன்கள் குறையும். தெய்வானையை, முருகன் மணம் முடிக்க காரணமாக இருந்த தலம் என்பதால், இந்திரன் இத்தலத்தில் மருமகனுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் தீபாவளிக்கு சீர் மற்றும் புத்தாடை எடுத்து தருவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.
Leave a Comment