தை அமாவாசைக்கு ராமேஸ்வரம் கோயிலில் பகல் முழுவதும் நடை திறப்பு.... 


தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 24 ஆம் தேதி ராமேஸ்வரம் கோயிலில் பகல் முழுவதும் நடைதிறந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு அன்று அதிகாலை 2.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும். காலை 7 மணிக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெறுவதைத் தொடர்ந்து கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். 

அமாவாசையையொட்டி பகல் முழுவதும் கோயில் நடை திறந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் இடைவிடாமல் அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகளுடன் ஸ்ரீராமர் வெள்ளி ரதத்தில் வீதியுலா நடைபெறும். அமாவாசையை முன்னிட்டு தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. 

அமாவாசையை முன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் நடை இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்பதால் அன்று பகல் முழுவதும் இடைவிடாமல் பக்தர்கள் கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடவும் அனுமதிக்கடுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 



Leave a Comment