திருச்செந்தூர் முருகப் பெருமானின் அற்புதங்கள் 


தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். 

சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.

கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. 

சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.

விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். 

விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து முருகன் கோயிலுக்குள் போவார்.

137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். 

தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார்.

சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்த சம்பவங்களாலும் கிழக்கு முகமாக சுப்பிரமணியர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்து விட்டதாலும் ராஜ கோபுர வாயில் மூடப்பட்டு விட்டதாம்.

ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகாமண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.
 



Leave a Comment