திருப்பதியில் 2 நாட்களுக்கு மட்டும் சொர்க்கவாசல் தரிசனம்..... 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ளது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் இரண்டு நாட்கள் மட்டுமே ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் அதிக அளவு பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படுவதாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுகுறித்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் எடுக்கும் முடிவே இறுதியானது என  தீர்ப்பு வழங்கியிருந்தது. 

இந்நிலையில் சொர்க்கவாசல் எத்தனை நாட்கள் திறப்பது என்பது குறித்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 2 நாட்களுக்கு மட்டும் பக்தர்களை சொர்க்கவாசல் வழியாக அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 



Leave a Comment