இறையை அறிவது எளிதல்ல


- "மாரி மைந்தன்" சிவராமன்

அது 
காவிரி கரைபுரண்டு 
ஓடிய காலம்.

அகண்ட காவிரியின் வடகரையில் 
ஓர் ஆலயம்

அது 
அரும்பெரும் சிவதலம். அருள் பொங்கும் மெய்த்தலம்

பஞ்ச பூதங்களில் ஒன்றான 
நீர் நிறை 
இறைத் தலம்.

இறைவனின் திருநாமம் ஜம்புகேசுவரர். இறைவி அகிலமெல்லாம் ஆளும் அகிலாண்டேஸ்வரி.

திருவானைக்காவல்.. அதுவே 
அக்கோயிலின் பெயராம்.
ஊரின் பெயரும் அதுவே.

அக்கோயிலில் 
ஓர் ஆடலரசி. 
அழகுப் பெட்டகம்.

இறை முன் 
நடனம் ஆடுவதும் 
பகல் முழுதும் ஓய்வின்றி 
கோயில் பணி செய்வதும் 
இரவில் நடை சாத்தி செல்வதுமே 
அவளது 
அன்றாடப் பணி.

கோயிலின் அருகிலேயே வீடு. வீடுபேற்றை 
நோக்கிய 
அர்ப்பணிப்பு வாழ்க்கை.

ஜம்புகேசுவரர் 
அவளது பக்தியை மெச்சி 
கொஞ்சம் 
விளையாட நினைத்தார்.

இளமை ஊஞ்சலாடும் இனிய பக்தையிடம் எப்படி விளையாடுவார்... திருவிளையாடல் நாயகன்...!

அவருக்கா தெரியாது...?

அவளது இளமைக்கே சோதனை வைத்தார். இறை விளையாட்டுத் தொடங்கியது.

அவள் வீட்டருகில் அவன்....

அவன் பெரிய ஆணழகன் இல்லை. படிப்பாளி இல்லை. சரிவர பேசக்கூட தெரியாது.

கோயில் வேலை. சொல்வதைச் செய்யும் கடைமட்ட வேலை.

திருவானைக்கா அருகே
ஒரு புறம் காவிரியும் மறுபுறம் கொள்ளிடமும் சூழ்ந்த தீவுத் திருத்தலம்
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உறையும்  திருக்கோயிலில் 
வயிற்றுக்கும் வாய்க்கும் போதாத ஏவல் வேலை.

அவளுக்கும் அவனுக்கும் 
இடையே 
அன்புத் தீயை மூட்டினார் 
நீர்த்தல பெருமான் ஜம்புகேசுவரர்.

எத்தனை முரண் பாருங்கள்....?!!

அவள் அழகுப் பெட்டகம். 
அவன் அழகை ஆராதிக்க 
தெரியாத அப்பாவி.

அவன் 
பள்ளி செல்லாதவன். பள்ளிகொண்டான் திருவடிகளைப் பற்றியவன்.

அவள் 
ஆடவல்லான் போல்
ஆடலில் அற்புதம் காட்டி 
இறைவனில் லயித்த ஊர் மெச்சும் கலையரசி. 

அவள் 
பெருமான் பக்தை - சைவம்.

அவன் 
பெருமாள் தொண்டன்- வைணவம்.

சிவபெருமான் 
மூட்டிய 
காதல் தீ 
இருவரையும் இணக்கம்
கொள்ள வைத்தது. ஈர்க்க வைத்தது.

கொழுந்து விட்ட
அத்தீ 
இருவரையும்
காதலில் 
திளைக்க வைத்து கல்யாணத்திற்கு 
நாள் குறித்தது...
முரண்களை 
எரிய வைத்து உரமாக்கியது.

தினமும் 
ஸ்ரீரங்கம்
அரங்கநாதர் கோயிலில் 
வேலை முடித்து விட்டு
வீடு திரும்பும் போது அப்படியே திருவானைக்கா வருவான் அவன்.

அவளும் பணி முடித்து காத்திருக்கும் - கைத்தலம் கொள்ளவிருக்கும் காதலருடன் 
வீடு திரும்புவாள்
கையணைத்தபடி.

வீடிருக்கும் வீதி
செல்லும் வரை
எதிர்காலக் 
கனவுக் கோட்டை இருவரையும் ஏங்கவைத்த 
வண்ணமிருக்கும்.

தெரு வந்ததும் 
சற்று விலகி 
வீடு வந்ததும் முற்றிலும் 
விலகிடுவர்
அருள் நிறை காதலர் இருவரும்.

ஒரு நாள் - திருவானைக்கா கோயிலுக்கு 
ஒரு சாமியார் வந்தார்.

அவர் 
அப்படி ஒன்றும் 
போலி இல்லை. சகலமும் கற்றுணர்ந்தவர்.
யாக யோகத்தில் வல்லவர். 

நிறைகள் நிறைந்த அவரிடம் 
குறை 
ஒன்றும் இருந்தது.

அவருக்கு 
ஜடாமுடி அளவிற்கு அதன் எடைக்கு ஈடாக தலைக்கனமும் இருந்தது.

அதனாலோ என்னவோ 
அவருக்கு கைகூடாத கவலை ஒன்றும் இருந்தது.

என்னென்னவோ 
தடல்புடலாகச் செய்தும் கடவுளைக்
கண்ட பாடில்லை.. இறை தரிசனம் இல்லாமலேயே இருந்தது.

திருவானைக் கோயிலில் 
நான்காம் 
மதில்சுவர் கட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சித்தர் வந்தாராம்.

அவர் பணியாளர்களுக்குத் திருநீறைக்
கூலியாகத் தந்தாராம்.

திருநீறு 
தங்கமாக மாறி பணியாளர்களை மெய்சிலிர்க்க வைக்க...
அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லையாம்.

அச் சித்தர்
வேறு யாருமில்லை... சிவனே 
என்கிறது 
தல புராணம்.

இத்தல புராணம் அறிந்த அந்த சாமியார் 
சிவனைக் கண்டு சரணடைய விருப்பம் கொண்டு திருவானைக்கா வந்தார்.

பாராமுகமாய் இருக்கும் 
இறை முகம் காணாமல் திரும்புவதில்லை 
என உறுதிபூண்டு கோயிலிலேயே முகாமிட்டார்.

ஒரு நாள் மாலை 
பணி முடித்து ஸ்ரீரங்கநாதரின் 
அடி தொழுது திருவானைக்காவல் வந்தான் 
மாயப் பெருமாள் பக்தன் -  சிவபெருமான் பக்தையுடன்
வீடு திரும்ப.

சீக்கிரமே வந்துவிட்டதால் 
ஒரு தூணோரம் அமர்ந்தான்.
சாய்ந்தவன்
எப்படியோ 
அப்படியே 
தூங்கி விட்டான்.

கொஞ்ச தூரத்தில் சாமியார் 
ஆழ் தவத்தில் இருந்தார்.

வேலை முடியவே , 
'நேரம் ஆகிவிட்டது.. இருள் வரத் தொடங்கிவிட்டது..'
என்றபடியே
வீடு திரும்ப 
கோயில்
வாசலுக்கு வந்தவள் வழக்கம்போல் அன்பானவனைத் தேடினாள்.

தூண் பின்புறம்
அவன் தூங்கிக் கொண்டிருந்ததால்
அவள் கண்களுக்கு அவன் அகப்படவில்லை.

வம்புகேசுவரரின்
திருவிளையாடல் களைகட்ட ஆரம்பித்தது.

ஒருகால் 
அவன் 
களைத்துப் போய் வந்து 
காத்திருந்து விட்டு 
வீடு திரும்பி இருக்கலாம் 
என எண்ணிய அன்பானவள்
நடையைச் 
சாத்தி விட்டு விரைவாக 
வீடு நோக்கி
நடையைக் கட்டினாள்.

கோயிலின் உட்பிரகாரத்தில் யாருமில்லை -  இருவரைத் தவிர.

ஒருவர் முக்காலம் தெரிந்த ஞானி...

இன்னொருவன் ஏதுமறியாத சாதாரணன்.

நள்ளிரவு... அகிலாண்டேஸ்வரி உட்பிரகாரத்தில் 
உலா வருவது வழக்கம்.

வந்தவள் 
தவத்திலிருந்த
சாமியாரைப் பார்த்தாள்.

அவர் கருமமே கண்ணாயிரமாய்
தவம் மேற்கொண்டிருந்தார்.

அவர் உதடுகள் சிவயவசி
என  ஓசையில்லாமல் 
சீரான லயத்தோடு துடித்துக்
கொண்டிருந்தன.

அன்னை மெல்ல 
அவர் அருகே வந்தாள்.

சாமியார்
கண் விழிக்க வில்லை. சலனமே இல்லாமல் இறை தேடிக்
கொண்டிருந்தார்.

அன்னை 
அன்பொழுக தவத்திலிருந்த
சாமியாரைத்
தொட்டு எழுப்பினாள்.

சட்டென கண்விழித்த சாமியாருக்கு கோபமான கோபம்.

கண்கள் சிவக்க புஜங்கள் துடிக்க
எரிந்து விழுந்தார்
" யாரம்மா நீ...
ஏன்னம்மா 
என் 
தவம் கலைத்தாய்...?

உனக்கு என்ன திமிர்...?"
சாபம் கொடுக்காதது தான் பாக்கி. 

" மகனே...
 நான் உன் அன்னை அகிலாண்டேஸ்வரி..." புன்னகை மாறாமல் இன்முகம் காட்டினாள்  தேவி.

"என்ன விளையாடுகிறாயா ? நான் யார் தெரியுமா ? என்னிடமே விளையாடுகிறாயா...! எனக்கா என் அன்னையைத் தெரியாது..?

அன்னை வருவதை எனக்கு முன்கூட்டியே இறைவன் 
சொல்லி விடுவான் தெரியுமா..!! இங்கிருந்து நகர்ந்து சென்று விடு....
என் கோபத்திற்கு ஆளானால்
தாங்க மாட்டாய்" 

நெஞ்சு துடிக்க..
விரட்டினார் கோபமாக.

அகிலாண்டேஸ்வரி புன்னகைத்தபடியே நகர 
சுவாமிஜி கண்ணைமூடி இறைவியைத் தேட ஆரம்பித்தார்.

எல்லாம் அறிந்த திருவானைக்கா ஜம்புகேஸ்வரர்
தன் திருவிளையாடலின் அடுத்த ஆட்டத்தை
ஆரம்பித்தார்.

அங்கிருந்து கிளம்பிய அன்னை 
கொஞ்சம் தள்ளி மண்டபத்தின் 
தூணில் சாய்ந்தபடி அரங்கனைப் போல் சயனம் கொண்டிருந்த அப்பாவியை நெருங்கினாள்.

தூக்கத்தை 
கெஞ்சிய கண்கள் 
யாரோ அருகில் இருப்பதை 
உணர்ந்து 
மெல்லத் திறந்தன. 

அன்னையின் கரம்
களைத்திருந்தவனின் தேகம் தொட்டது.

அவ்வளவு தான்...!
துள்ளி எழுந்தான்.

" அன்னையே... தாயே..!
அம்மா...
என்ன புண்ணியம் செய்தேனோ...!

எப்படியம்மா 
எனக்கு காட்சி தருகிறாய்...!

ஐயோ...
ஒன்றுமே புரியவில்லையே....!

எங்கே அவள்...
இந்த நேரம் பார்த்து இங்கில்லாமல்...
எங்கோ போய் விட்டாளே....!

அவள் உன் பக்தை ஆயிற்றே...!!

அம்மா.... அம்மா ரட்சிப்பாய் எங்களை ..."
திருவடி விழுந்தான்.

ஜெக ஜோதியாய் காட்சியளித்த அகிலாண்டேஸ்வரி மெல்ல தோள் தூக்கி அவன்
 தலை நிமிர்த்தினாள்.

 "நாக்கை நீட்டு" என்றாள் அன்பாக.

பயபக்தியுடன் அவன்
நாக்கை நீட்ட 
தன்  
அருள் விரல்களால் 
அவன் நாவில்
ஏதோ தீட்டினாள்.

"வருகிறேன்"
என கனிவாகச் சொல்லிவிட்டு 
சன்னதி நோக்கி நடந்து 
திரும்பி ஒருமுறை அவனைப் பார்த்து  புன்னகைத்து
மறைந்தாள்.

மறைந்திருந்து வேடிக்கைப் 
பார்த்துக் கொண்டிருந்த 
மறை நாயகன் 
இறவி இருப்பிடம் 
திரும்பிய கையோடு தன் திருவிளையாடலை முடித்துக்கொண்டு பள்ளி அறைக்குள் நுழைந்து கொண்டார்.

நாவிலே இறையருள் பெற்றவன் தான்.... எதுவுமே அறியாத அந்த அப்பாவி தான் ...
தற்குறி பக்தன் தான்....
பின்னாளில் உலகமே போற்றிய புலவன் ஆனான். 

புவி போற்றிய
கவி காளமேகம் ஆனான்.

வான் மழை தோற்கும்
கவி மழை பொழிந்தான்.

கவனியுங்கள்....

தவ வேள்விகளில் சிறந்த 
சாமியாருக்கு 
இறைவி காட்சியளித்தும் அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை.

விரட்டியே அடித்தார்.

அவரது ஞானம் 
பலன் தரவில்லை. எல்லாம் 
எனக்குத் தெரியும் என்கிற கர்வம் 
கடவுளே காட்சியளித்த போதும் 
கண்ணை மறைத்து மூளையை மழுங்கடித்து
சாமியாரை சாதாரணன் ஆக்கிவிட்டது.

அதேசமயம் 
ஒரு சாமானிய பக்தனை
உலகம் போற்றும்
கவிஞானி ஆக்கியது இறைவன் திருவுளம்.

ஆம்...
இறை திருவுளம் என்பது 
குறையில்லாதது.
அதை அறிவது அவ்வளவு எளிதல்ல.



Leave a Comment