புத்தாண்டை முன்னிட்டு தேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம்..... 


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி முதல் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்லத்துரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் இது குறித்து  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு டி.31-ம் தேதி இரவு 12 மணி முதல் ஜனவரி 1 இரவு 10.30 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் என தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 

ஏழை பணக்காரன், சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் அம்மனை ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புத்தாண்டு தினத்தில் அம்மனை தரிசிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்களின் வசதிக்காக சென்னையின் பிற பகுதிகளிலிருந்து தொடர்ந்து மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி, தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்களின் கூட்டத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 200 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு தரிசனத்தை முன்னிட்டு  கருவறையில் அர்ச்சனை தேங்காய் உடைப்பதற்கு அனுமதியில்லை. அதற்குப் பதிலாக 3-ம் பிரகாரத்தில் 3 இடங்களில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்றைய தினம் மட்டும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். என்றார் அவர்.

கோவில் முன்னாள் அறங்காவலர் ரமேஷ், கோவில் அதிகாரிகள் கண்ணன், மலைச்சாமி, மேலாளர் பாஸ்கர், கண்காணிப்பாளர்கள் விஜிலாராணி, சுசில்குமார், செந்தில்குமார் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Leave a Comment