சபரிமலையில் நடை அடைப்பு 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெற்றது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் தங்க அங்கி மண்டல பூஜையின் போது அய்யப்ப சாமிக்கு அணிவிக்கப்படும். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து தங்க அங்கி ஊர்வலம் கடந்த 21-ந்தேதி சபரிமலை நோக்கி புறப்பட்டது.

வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கி ஊர்வலத்தை வரவேற்றனர். நேற்று மாலை சபரிமலைக்கு தங்க அங்கி வந்து சேர்ந்தது. இந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

மண்டல பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி முதல் 11.40 வரையிலான கும்ப ராசி வேளையில் அய்யப்பனுக்கு மண்டல பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நிறைவு நாளான இன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

மீண்டும் டிச. 30ம் தேதி மாலை 5 மணி அளவில் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்படுகிறது. ஜன. 20ம் தேதி மாலை படி பூஜையுடன் இந்த வருடத்தின் சபரிமலை சீசன் நிறைவடைகிறது. 



Leave a Comment