திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மதியம் 12 மணி வரை தரிசனம் ரத்து 


சூரியகிரகணம் வியாழக்கிழமை காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்துக்கு  ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக கோவில் மூடப்படுவது வழக்கம். அவ்வாறு புதன்கிழமை இரவு 11 மணிக்கு கோவில் கதவுகள் அடைக்கப்பட உள்ளது. 

இதற்காக இரவு 10 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் மூலவர் சன்னதி முதல் ராஜகோபுரம் உள்ள மகா துவாரம் கதவு வரை அனைத்தையும் மூட உள்ளனர். மீண்டும் சூரியகிரகணம் நிறைவு பெற்ற பிறகு வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி  கோவில் முழுவதும் சுத்தம் செய்து சூரிய கிரகணத்தால் ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரமாக பூஜைகள் மேற்கொள்ள உள்ளனர். 

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய திருப்பாவாடை சேவை,  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை,  வசந்த உற்சவம் , ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சூரிய கிரகணத்தை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் தேவஸ்தானம் சார்பில் வழங்கக்கூடிய அன்னப் பிரசாதம் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் 4 மணிக்கு பிறகு  உணவுகள் தயார் செய்யப்பட்டு வழக்கம்போல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று திருப்பதியிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார், கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில்,  கோவிந்தராஜ ஸ்வாமி கோவில்,  கோதண்டராம சுவாமி கோவிலும் சூரிய கிரகணத்தை யொட்டி  வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment