முன்னை அவன் நாமம் மறந்தான்.... பின்னை அவன் கொடியில் பறந்தான்....
- "மாரி மைந்தன்" சிவராமன்
பாரதப் போரில் அர்ஜுனன் தேரில் சாரதியாய் கண்ணன்...
தேரின் உச்சியில்
பறந்து கொண்டிருந்த தேர்க் கொடியில் ஆஞ்சநேயன்
பறந்தவண்ணம் கம்பீரமாய்
காட்சியளித்தது.....
ஏனென எத்தனை பேருக்குத் தெரியும் ? அதன் காரணம் எத்தனை பேருக்குப் புரியும் ?
கர்வத்தின் விளைவுகளையும் இறைநாமத்தின் மாண்பையும்
ஒருசேரச் சொல்லும் புராண நிகழ்வு, அது.
போரில் மட்டுமல்ல வாழ்க்கைத் தேரிலும் இறைவன் சொன்ன வெற்றிக்கான சூத்திரம் அது.
ஒருசமயம் அர்ஜுனனுக்கு
ஞானி ஒருவர் சொல்லியிருந்த
பாசுபாதாஸ்திரம் நினைவுக்கு வந்தது.
அந்த அஸ்திரம் கைவசம் இருந்தால் எந்த போரிலும் வெற்றியே என்பதே அவன் கேள்விப்பட்டிருந்தது.
தேடினான்
அர்ஜுனன்.
காடு மலை
நதி தீரம் என
தேடி அலைந்தான்.
கொஞ்சம் சலிப்பு கெஞ்சும் சோர்வு
தளர்ந்த நடையில் வந்து கொண்டிருந்த போது
ஓர் ஆறு
குறுக்கே வந்தது.
ஆற்றின் கரையில் குரங்கொன்று கண்மூடி
தியானத்தில் இருந்தது.
உதடுகள் மட்டும் மெலிதாய் எதையோ உச்சரித்த வண்ணம் குவிந்தும் விரிந்தும் விளையாடிக்
கொண்டிருந்தன.
கவனித்த அர்ஜுனன் இறுமாப்போடு குரங்கை நெருங்கினான்.
" ஏய் மடக் குரங்கே...!
ஏன் இப்படி ஏமாந்து கொண்டிருக்கிறாய் ?
உன்னைப் போன்ற வானரங்கள் தாம்
ராமனைத் தெய்வமென
தூக்கிப் பிடிக்கின்றன.
அவன் ஒன்றும்
பெரிய ஆள் கிடையாது.
நானாய் இருந்திருந்தால் அம்பெய்தியே
பாலம் கட்டி இருப்பேன்.
உங்கள் இனத்தை உதவிக்கு அழைத்து பாறைகளைத்
தூக்க வைத்து சித்திரவதைப் படுத்தியிருக்க மாட்டேன்.
காலம் கடத்தி சீதாபிராட்டியை காத்திருக்க வைத்திருக்க மாட்டேன்.
போரில்
வானரங்களை விட்டிருக்கவும் மாட்டேன்.
உங்களில் சிலரை பலி கொடுத்திருக்கவும் மாட்டேன்.
பாலம்
என் வில்லின் மகிமையால்
பல காலம் நிலைத்திருந்திருக்கும்.
உன் ராமன் வில்லாளியா என சந்தேகிக்கிறேன்....!"
அர்ஜுனன் கேலியாய் வம்புக்கு இழுத்தான்
தியானத்தில் இருந்த வானரத்தை.
வானரம் கண்விழித்துப் பார்த்தது.
அருகிலிருப்பது
யார்என்பதும்
புரிந்தது.
யாராக இருந்தால் என்ன ?
ராமனைக்
கேலி செய்பவனை விட்டுவிடுவதா ??
அக்கணமே விஸ்வரூபம் எடுத்தது.
அர்ஜுனனே
ஓரடி பின்னோக்கித் தள்ளி நிற்கும் அளவிற்கு
ஓங்கி உலகளந்து பேரொளி பரப்பியது.
ஆம் ...
அந்த வானரம் அனுமனாய் உருமாறியது .
"அட.... அனுமன்...!"
விஸ்வரூப அனுமனைக்
கண்டும் அசரவில்லை அர்ஜுனன்.
மீண்டும் அதே கேள்வியை
கேலியாகவே வைத்தான்.
நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்
ராமபிரானின் வில்வித்தையை அர்ஜுனன்
குறை சொல்வதை அவனது கேலி வார்த்தைகளை அனுமன் மனம் ஏற்கவில்லை.
கோபம் கொப்பளித்தது,
உடனடியாக
அவன்
கர்வத்தை அடக்க நினைத்தான் அஞ்சனை மைந்தன்.
"நீ சொல்வது போல் சரப்பாலம் அமைத்தால்...
அத்தனை வானரங்களின் பாரம் பாலம் தாங்காதே .... அதனால் எம்பிரான் அம்பால் பாலம் அமைக்காமல் அன்பால் பாலம் அமைக்க
எங்களுக்கு
வாய்ப்பு தந்தார்" என்று பதில் தந்தான்
சொல்லின் செல்வன்.
குந்தியின் மைந்தன் நகைத்தான்..
"ஏன் முடியாது?
நான்
நாண் பூட்டி அம்பெய்தி
பாலம் கட்டுகிறேன்...
நீ என்ன....
உன் பெரும் கூட்டத்தை அதன்மேல் கும்மாளமிட்டச் சொல். பாலம் தாங்கும் ..
என் காண்டீபத்தின் மகிமை காண்"
என சொல்லியவாறு
நாண் ஏற்றினான் வில்லுக்கு விஜயனான அர்ஜூனன்.
"போட்டியென வந்துவிட்டால்
பந்தயம் இருக்கவேண்டுமே" அனுமன்
நிபந்தனையிட்டான்.
"எனக்குச் சம்மதமே ...
நான்
தோற்றுப் போனால் வேள்வித் தீ வளர்த்து உயிர் துறப்பேன்" பந்தயத்திற்கு
உயிரைப் பணயம் வைத்தான் அர்ஜுனன்.
"நான் தோற்றால் உனக்கு அடிமை " அனுமனின் குரலில் அழுத்தம் இருந்தது. நம்பிக்கை இருந்தது.
அர்ஜுனன்
வில் வளைத்து
அம்பு பூட்டி
சரப்பாலம் அமைக்க ஆரம்பித்தான்.
அனுமன் வழக்கம்போல் நதியோரம் அமர்ந்து ராமநாமத்தை
துதிக்க ஆரம்பித்தான்.
பாலம் கட்டி முடித்தான்
அர்ஜுனன்.
அனுமனை அழைத்து
"குதித்துப் பார் பாலத்தின்
வலிமை புரியும்.
நீ மட்டுமல்ல
உன் ராமனும் தோற்ப்பான் ."
கோபத்தோடு
அனுமன்
பாலத்தின் மீது
கால் வைத்தான் மெதுவாக.
அடேடே ...
பாலம் தகர்ந்தது... சிதறியது சுக்குநூறாக.
வெற்றி கண்ட
அனுமன்
ஆனந்தத்
தாண்டவம் ஆடினான்.
தோற்ற அர்ஜூனன்
வெட்கித் தலைகுனிந்தான்.
அங்கேயே
தீ மூட்டி
உயிர் துறக்க ஆயத்தமானான்.
"வேண்டாம் மன்னவா....
சும்மா விளையாட்டுக்குத்
தான்
பந்தயம்.... கட்டினேன்.
விபரீதம் வேண்டாம்__"
குறுக்கே நின்றான் அனுமன்.
அர்ஜுனன் செவிமடுக்கவில்லை.
கடைசியாக கண்ணனை நினைந்துக் கனிந்துருகி
தன் ஆணவத்திற்கு கிடைத்த
மரண அடியை
உலகம் அறியட்டும்
என எண்ணியபடியே மூட்டியிருந்த
தீயில் தீயாய்
கரைய முற்பட்டான் கண்ணனின் மைத்துனன் அர்ஜுனன்.
அது சமயம்
ஒரு முதியவர் குரல் ஆற்றோரம் இருந்த புதரோரம் ஒலித்தது.
"கொஞ்சம் பொறுங்கள் ..
இதோ வருகிறேன்"
குரல் வந்த திக்கை இருவரும் நோக்கினர்.
ஒலித்த உருவம் அருகில் வந்தது.
வந்தது ஒரு
வயதான அந்தணர்.
வந்தவர் நடந்ததைக் கேட்டறிந்தார்.
" என்னப்பா..
பந்தயம் சரிதான்.
சாட்சிக்கு ஒருவரேனும் இருந்தால்தானே பந்தயத்தில்
நியாயம் கிடைக்கும்.
வேண்டுமானால்
இந்த வழிப்போக்கன் சாட்சியாக இருக்கிறேன்.
மீண்டும் ஒரு பந்தயம் நடக்கட்டும்"
தெளிவாய் சொன்னார்
மெலிதாய் இருந்த
அந்தணர் மென்மையாய்
பூணூலைச் சரிசெய்தபடி.
சம்மதித்தனர் இருவரும்.
'போட்டி தொடங்கட்டும்' நாட்டாமை அறிவித்தார்.
இரண்டாவது முறை... அதே போட்டி.
அதே தண்டனை.
அர்ஜுனன்
"கிருஷ்ணா கிருஷ்ணா '
என்றபடி
வில்லம்பால்
பாலம் கட்டினான்.
முதல் பந்தயத்தில்
பாலத்தைச் சுக்குநூறக்கிய
அனுமனுக்கு இப்போது
தலை கனத்து இருந்தது.
வெற்றியின் மிதப்பு ராமனை மறக்கச் செய்திருந்ததால் ராமநாமம் கூட
அவன்
ஜெபிக்க வில்லை.
இம்முறை
அர்ஜுனன் கட்டிய பாலத்தின் மீதேறி அனுமன் குதித்தான். பலம் கொண்டு தாவினான்.
தன் பலம் முழுவதையும் பிரயோகித்து
மனபலம் சேர்த்து உடல்திறன் நிறைத்து ஏதேதோ செய்து பார்த்தான்.
பாலம் அசைவற்று ஆரவாரமற்று அமைதியாய்
வலுவாய் இருந்தது.
அனுமன் முகம் கவிழ அர்ஜுனன் கூவினான்.
"பார்த்தாயா.... ராமபக்தனே,...?
என் கண்ணனின் சக்தியை...!
கண்ணனே பெரியவன்.
உன்
ராமன் தோற்றவன்".
தீர்ப்பு
சொல்ல வேண்டிய
அந்தணர்
புன்னகை பூத்தபடி இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தார்.
அப்பார்வையின்
தீட்சண்யத்தால் பரவசமாகி...
"யார் நீங்கள் "
இருவரும்
ஒருசேரக் கேட்டனர்.
"நான் யார்
என்பது இருக்கட்டும். அது இப்போது முக்கியமல்ல.
என் தீர்ப்பைக் கேளுங்கள்....
நீங்கள் இருவருமே தோற்கவில்லை....
ஜெயித்தது
கடவுள் பக்தியும்
நாம ஜெபமும்...
தோற்றது
கர்வம்.....
அகந்தை....
மமதை.....
முதல் போட்டியில்
அகந்தையால் அர்ஜுனன் தோற்றான்.
ராம ஜெபத்தால்
அனுமன் வென்றான்.
இரண்டாம் முறை....
வெற்றிக் களிப்பில்
அனுமனுக்கு கர்வம். இறைநாமம் மறந்தான்.
கர்வம் தொலைத்த அர்ஜுனன்
'கிருஷ்ணா கிருஷ்ணா ' என்று பகவானைச் சரணடைந்தான்,
வென்றான்.
"ஆஞ்சநேயா... அர்ஜுனா.... உங்களிருவரின் பக்தியும்
அளவு கடந்தது.
ஆனால்
இறைவன் ஒருவனே என்பதை
இருவரும் மறந்தீர்.
கர்வம் எப்பேற்பட்டவரையும் அழிக்கும் என வையகத்திற்குப் புரியவைத்தீர்....
வாழ்க நீவிர்..."
அந்தணர் புறப்பட அனுமன் குறுக்கே
ஓடிவந்தான்.
"வேதம் அறிந்தவரே.. தோற்றதற்கு
எனக்கு
என்ன தண்டனை ?" வேதனையுடன் கேட்டான் அனுமன்.
"தண்டனை இல்லை வானரத் தலைவனே...
வரம் தான் உண்டு.
எதிர்காலத்தில்
விதிப்படி
நடக்க இருக்கும் பாரதப்போரில் அர்ஜுனன் தேரின் கொடியில் இருந்து அர்ஜுனனைக் கருத்தாய் காப்பாய்.
நீயிருக்கும் வரை அர்ஜுனனுக்குத் தோல்வி இருக்காது.
இருவரும்
அருகில் வாருங்கள்.... காதோடு ஒரு ரகசியம் சொல்கிறேன்.
அந்தப் போரில்
அந்தத் தேரில்
உங்கள் இருவருடனும் நானும் இருப்பேன்."
இருவரும்
புருவம் உயர்த்தி அந்தணரை நோக்க -
அதே கணத்தில்
அவர்
புன்னகைத்த வண்ணம்
அவர்கள் கண்ணெதிரே கரைந்து போனார். மறைந்து போனார்.
இருவருக்கும் புரிந்தது...
அந்த மயக்கும்
புன்னகை
மாயக் கண்ணன் ஒருவனுக்கே சாத்தியமானது ஆயிற்றே ...!
உண்மைதான்.
சத்தியமாக
அந்த அந்தணர் சத்யபாமாவின்
கண்ணபிரானே....!
மகாபாரத காலத்திலும் அனுமன் இருந்தார் என்பதே
இச்சம்பவம் வெளிப்படுத்தும் புராண நிகழ்வு, இது.
Leave a Comment