மகாலட்சுமியுடன் தோன்றிய சங்கின் பெருமை....!
அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது சங்கு. இதில் வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு, சலஞ்சலம், பாஞ்ச ஜன்யம் என பல வகையுண்டு.
போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. வலம்புரிச் சங்கிற்கு அதிக பெருமையுண்டு. மகாவிஷ்ணு தன் இடது கரத்தில் தரித்திருப்பது வலம்புரிச் சங்காகும். சில தலங்களில் கணபதி, முருகன், ஆஞ்சநேயரும் சங்கை ஏந்தி காட்சியளிக்கின்றனர்.
ஆலய வழிபாடுகளில் சங்கநாதம் எழுப்புவதும் ஒன்றாகும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போதும் சங்கினை ஒலிக்க வைப்பார்கள். பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சங்கை வைத்திருந்ததாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. கிருஷ்ணனன் வைத்திருந்த சங்கு "பாஞ்சஜன்யம்'; தர்மனிடம் "அநந்த விஜயம்', பீமனிடம் "பெளண்டரம்', அர்ஜுனனிடம் "தேவதத்தம்', நகுலனிடம் "சுகோஷம்' மற்றும் சகாதேவனிடம் "மணிபுஷ்பகம்' என்று பெயர் பெற்ற சங்குகள் இருந்தன. சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் குழந்தைகளுக்கு பால் புகட்ட சங்கை பழங்காலத்தில் உபயோகித்தனர்.
பெளத்தர்களும் சங்கை புனிதமாகக் கருதுகின்றனர். அவர்களுடைய எட்டு மங்கலச் சின்னங்களில் இதுவும் ஒன்று. வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது.
வலம்புரிச் சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால் ஏழு பிறவிகளில் செய்த வினைகளையும் நீக்கலாம் என்று ஸ்காந்தம் கூறும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். அந்த சங்கின் அமைப்பு, பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். இந்த சங்கை காதில் வைத்தால் அதிலிருந்து எழும் ஓசை "ஓம்' என்பதாகும். வைதீக சைவர்கள் ஆத்மார்த்தமாகவோ பரமார்த்தமாகவோ செய்யும் பூஜைகளில் சங்கு பூஜை முக்கிய இடத்தைப் பெறுகிறது. திருக்கோயில்களில் விசேஷ காலங்களில் இறைவனுக்கு சங்காபிஷேகம் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
Leave a Comment