ஆயுள் விருத்தி தரும் சோமவார சங்காபிஷேகம்.... 


சிவாலயங்களில் சிவனுக்குகந்த கார்த்திகை சோமவாரத்தில் நடைபெறும் சங்காபிஷேகம் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது.

 கார்த்திகை மாதத்தில், சிவாலயங்களில், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் சிவபெருமானை தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சந்திரனே நம் மனதை ஆள்பவன். ஆனால் அந்த சந்திரனை தன் தலையில் சூடிக் கொண்டுள்ளார் சிவபெருமான். கார்த்திகை திங்கட்கிழமை நாளில், சிவபெருமானுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம். ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

 ஒருமுறை சாபத்தினால் ஷயரோகம் பீடிக்கப்பெற்று, மிகவும் துன்புற்ற சந்திரன் சாபத்திலிருந்து விடுபட, கடும் தவமிருந்து, கார்த்திகையின் சோம வார நன்னாளில் விரதம் மேற்கொண்டு, சிவபூஜை செய்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனது துன்பத்தை நீக்கி விமோசனம் தந்தருளினார். அதுமட்டுமின்றி, சந்திரகலையில் ஒன்றைப் பிறையாக்கி, தன் தலையில் சூடி சந்திரனுக்குப் பெருமை சேர்த்தருளினார். இதனால்தான் பெருமானுக்கு, சந்திரசேகரர் எனும் திருநாமமே அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம்.

அத்தகு பெருமை பெற்ற சோமவாரத்தன்று சிவன் சந்நிதிக்கு முன்பாக 54, 60, 64, 108, மற்றும் 1008 சங்குகளை வரிசையாக வைத்து, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பின்னர் தண்ணீர் நிரப்பி அதில் வாசனை திரவியங்களைப் போட்டு, பூஜை செய்து, பின்னர் எல்லாவற்றையும் இறைவனுக்கு அபிஷேகிப்பர். சோமவாரத்தில் சங்காபிஷேகத்தைத் தரிசித்தால் ஆயுள் விருத்தி உண்டாகும், தீராத நோய்களும் தீரும். துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.
 
இந்த சங்காபிஷேகம் கார்த்திகை சோமவாரத்தில் பலத் திருத்தலங்களிலும் நடைபெறுகின்றன. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை பெரிய கோயில், நாகை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல சிவாலயங்களில் சங்காபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சங்காபிஷேகம் கண்குளிரக் கண்டு இறைவனைத் தரிசித்து வழிபடுவதால் மனமகிழ்வு கூடும். சகல செல்வங்களும் வந்து சேரும். சங்காபிஷேகத்தன்று சிவ தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் இழந்ததைப் பெறுவீர்கள். 



Leave a Comment