சபரிமலை செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.... 


சபரிமலை ஐயப்பன் கோயிலின் சந்நிதானத்தை சுற்றியுள்ள இடங்களில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு மிகுந்த சந்நிதானத்தின் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதைத் தொடா்ந்து, பதினெட்டாம் படிக்கு மேற்பகுதியிலும், சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதியிலும் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பதினெட்டாம் படிக்கு செல்லக் கூடிய பெரிய நடைப்பந்தல் பகுதியிலேயே பக்தா்கள், தங்களது செல்லிடப்பேசியை அணைத்துவைத்துவிட வேண்டும். அதை மீறி யாரேனும் செல்லிடப்பேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா் முதலில் எச்சரிக்கப்படுவார். அதே தவறை அவா் மீண்டும் செய்தால், செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்படும்.

அதேபோல சபரிமலையில் பக்தா்கள் பிளாஸ்டிக் பைகளையும், இதர பொருள்களையும் ஆங்காங்கே வீசுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து, ‘சபரிமலை பசுமை திட்டம்’ என்ற பெயரில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, செங்கன்னூா் ரயில் நிலையத்தில் பக்தா்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை வழங்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகள் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 



Leave a Comment