சபரிமலையில் டிசம்பர் 23 தங்க அங்கி ஊர்வலம்.... 


சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையை ஒட்டி வரும் 23 ஆம் தேதி தங்க அங்கி ஊர்வலம் தொடங்குகிறது. 

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அய்யப்பனுக்கு விசே‌ஷ பூஜை, நெய் அபிஷேகம், தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்கு முதல்நாளான 26-ந்தேதி சூரிய கிரகணம் என்பதால் அன்று காலை 7.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். பகல் 11.30 மணிக்கு பிறகு மீண்டும் நடை திறக்கப்பட்டு 1 மணி வரை பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு நடை அடைத்து மாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை காட்டப்படும். பூஜைகளுக்கு பிறகு இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தங்க அங்கி வருகிற 23-ந்தேதி அங்கிருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்படும். 26-ந்தேதி பகல் பம்பையை இந்த ஊர்வலம் வந்தடையும். பம்பை கணபதி கோவிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

மறுநாள் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தங்க அங்கியில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனையுடன் மண்டல பூஜை நடைபெறும். அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். 14-ந்தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.



Leave a Comment