கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது


கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

கிருதாயுகத்தில் முக்கண்ணனின் திரிபுரதகனத்தைக் கண்ட ஈசன் எழுப்பிய சிரிப்பொலியின் ஜோதியே உலகெங்கும் பரவி பிரகாசமான சூழல் உருவாகியது. அதனையே நாம் கார்த்திகை தீபமாக கொண்டாடுகிறோம்.

சிவனே மலையாகி நிற்கும் திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று ஏற்றப்படும் விளக்கின் ஜோதியில் மூன்று தேவிகள் மற்றும் தேவர்களின் அனுக்கிரகம் தெரிவதாக நினைத்து வழிபடுவது ஐதீகம்.

லட்சுமி தேவியின் வடிவத்தை சுடரிலும், சரஸ்வதி தேவியின் வடிவத்தை ஒளியிலும், பார்வதி தேவியின் சக்தியை வெப்பமாகவும் காணும் அனைவரும் நற்கதி அடைவார்கள் என்று பெரியவர்கள் கூறுவது வழக்கமாகும்.

அதே போல் தீபத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் மற்றும் எண்ணெய் நிறையுமிடத்தில் சிவ பெருமானும் இருப்பதாய் கூறுவதும் ஐதீகம். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபமானது 11 நாட்கள் வரை எரியும்.



Leave a Comment