திருப்பதியில் ஒரு மாத உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆயிரத்து 198 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 லட்சத்து 93 ஆயிரத்து 17 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு 21 லட்சத்து 16 ஆயிரத்து 215 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதேபோல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 537 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு 8 லட்சத்து 75 ஆயிரத்து 545 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
சாமி தரிசனம் செய்த பக்தர்கள் கடந்த ஆண்டு 86 .77 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தி நிலையில் இந்த ஆண்டு 93.77 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்தவர்களுக்கு அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டு 6.61 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 7.68 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் 2018 - 19 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் 707.95 கோடி ரூபாய் செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 777.78 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இதேபோன்று ஏப்ரல் முதல் நவம்பர் வரை கடந்த ஆண்டு 562 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 803 கிலோ தங்கம் செலுத்தியுள்ளனர் இதன் மூலமாக கடந்த ஆண்டை காட்டிலும் 241 கிலோ தங்கம் கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. 1859 கிலோ கடந்த ஆண்டு வெள்ளி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு 3852 கிலோ செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டு 1993 கிலோ கூடுதலாக வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இது தவிர தேவஸ்தானம் சார்பில் உள்ள 11 அறக்கட்டளைக்கு கடந்த ஆண்டு 178.08 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 213.24 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 35.16 கோடி ரூபாய் கூடுதலாக பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளதாக தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Comment