திருவையாற்றில் ஜனவரி 11-ஆம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தொடங்குகிறது
திருவையாறில், ஜனவரி மாதம் 11-ந் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தொடங்குகிறது. அதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுஜகவரி மாதம் 11 ஆம் தேதி தொடங்கும் விழா 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தியாகராஜர் சமாதி வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்யபகுல பஞ்சமி திதியான அடுத்த மாதம் 15-ந் தேதி தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இதையொட்டி அன்று காலை திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தியாகராஜர் சிலை உஞ்சவிருத்தி பஜனையுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆராதனை பந்தலை வந்தடையும்.
அதைத்தொடர்ந்து தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள்.
Leave a Comment