திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு வந்தால் தங்கம் பரிசு.... ஆனால் ஒரு சின்ன நிபந்தனை!


திருவண்ணாமலை மகா தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 10-ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் தரிசனம் மற்றும் அன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் தரிசனம் ஆகியவை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் துணிப்பை மற்றும் சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  துணிப்பை மற்றும் சணல் பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்படும் என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயம், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். விழா காலங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், துணி, சணல் பைகளை மக்களிடம் ஊக்குவிக்கவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 



Leave a Comment