சகுனியின் சபதம்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பொதுவாக இதிகாசங்களில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் 
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முன்னும் பின்னும் 
ஒரு கதை இருக்கும். ஒரு வரம் இருக்கும். 
ஒரு சாபம் இருக்கும். ஒரு நியாயம் இருக்கும்.

சகுனி மட்டும் விதிவிலக்கா என்ன ?

ஆம்...
இதிகாசம் மகாபாரதத்தில் வில்லன் சகுனியின் புகழ் பேசும் கதை ஒன்று உண்டு.

சகுனி 
உலகோரின் கண்களுக்கு மனிதாபிமானம் இல்லாத கொடூரன். வில்லாதி வில்லன்.

ஆனால்
முக்காலம் உணர்ந்த கண்ண பரமாத்மாவின் பார்வையிலோ 
சகுனி
மனசாட்சி உள்ளவன். எல்லோரையும்விட புகழுக்குரியவன்.

இதோ பாரதம் போற்றும் மகாபாரதத்தின்
உணர்ச்சிமிக்க காட்சிகளின் படப்பிடிப்பு....

சுபலன்
சகுனியின் தந்தை.

சுபலனுக்கு 
மூன்று மகன்கள். கடைக்குட்டியே சகுனி.
ஒரே மகள் காந்தாரி. திருதராஷ்டிரன் மனைவி.

இருப்பினும் 
இப்போது 
சுபலன் குடும்பம் சிறைக் கொட்டடியில்.

அவர்கள் பாதாள சிறைக்குள் இருப்பதற்கு பீஷ்மரிடம் 
ஒரு நியாயமான காரணம் இருந்தது

பீஷ்மர் தான் 
முன் வந்து 
சுபலனிடம் 
பெண் கேட்டார்
தம்பி திருதராஷ்டிரனுக்கு.

மன்னர் குடும்ப உறவு. பீஷ்மரே கேட்கிறார்.... மறுக்க முடியுமா ?

சுபலன் சம்மதிக்க திருமணம் நடந்தேறியது சுபமாக.

அரசகுல 
திருமணம் என்றால் அது வெறும் 
உறவு மட்டுமல்ல.

பிரஜைகள் திருமணமே ஆயிரங்காலத்து 
பயிர் எனில் 
மன்னரது மணம்.... பல்லாயிரம் கால பாரம்பரியமிக்கதே !

திருமணத்திற்குப் பின்னரே 
பீஷ்மருக்கு 
ஓர் அபசகுணச் செய்தி தெரிய வந்தது.

அதுவே சுபலனின் குடும்பத்தை சிறையிலடைத்தது.

வேறொன்றுமில்லை.

கல்யாண நேரம்
கூடி வந்த வேளை..
காந்தாரியின் ஜாதகப்படி 
முதல் கணவன் 
ஆயுள் சொற்பம் என்றனர் ஜோதிடர்.

தந்தை சுபலன் கலக்கமுற 
பரிகாரம் சொன்னார் விவரம் நிறைந்த ஜோதிடர் ஒருவர்.

'ஆட்டுக்கிடா 
ஒன்றுக்கு சம்பிரதாயமாகத் திருமணம் செய்தால் போதும்.
அடுத்தபடி திருமணம் அற்புதமாய் நடக்கும். அடுத்து வருபவனின் ஆயுளும் 
அற்புதமாய் நீளும்.'

ஜோதிடர் சொன்ன மாதிரியே 
செய்தான் சுபலன்.

அந்த ஜோதிடர் சொன்ன மாதிரியே வாராது வந்த 
மாமணி போல் 
வரன் வந்தது -
அரச குடும்பத்திலிருந்து.

ஆனால் 
இந்நிகழ்வு திருமணத்திற்குப் பின்னர் 
பேரிடிச் செய்தியாய் பீஷ்மரை 
வெடிக்கச் செய்தது.

"ஆட்டுக்கிடாவானாலும் தாலி கட்டி
தாலியை அறுத்தவள் விதவை தானே?

ஒரு மன்னர் குல மன்னவன் விதவையை மணப்பதா ?

இது பெரும் பாவம் அன்றோ !?

 நாடு என்னாகும் ? குலம் என்னாகும் ? வாரிசுகள் என்னாவர் ?

சுபலன் மறைத்து விட்டானே !

பெரும்
தீங்கிழைத்து விட்டானே !!

பாவம் செய்து படுகுழியில் 
தள்ளி விட்டானே !!

அவனுக்கு மட்டும் தண்டனை போதாது.
அவன் குடும்பத்தையே சிறையில் தள்ளவேண்டும்.
அவர்கள் வெளியே இருந்தால் குலப்பெருமை நாட்டிற்குள் நாறிவிடும்.

விதவைப் பெண்ணை திருதராஷ்டிரன் மணந்ததும்
சுபலன் பாதாளச் சிறையிலிருப்பதும் உலகுக்குத் தெரியாமல் போகட்டும்.

சுபலன் குலமே
பாதாளச் சிறையிலேயே
அழிந்து ஒழியட்டும்.

இதுவே அரச தர்மம்."

சினந்தார் பீஷ்மர். சிறைப்பட்டது 
சுபலன் குடும்பம்.

கும்மிருட்டுச் சிறையில் 
சுபலன் 
குடும்பம் பட்டபாடு உலகம் அறியாதது.

ஒருவருக்கு மட்டுமே போதுமான உணவு. அதுவும் ஒரே வேளை.

குடும்பத்தினர் உண்ணாமல் 
சின்ன வயது சகுனிக்கே தந்தனர் அவனாவது பிழைக்கட்டும் என்று.

அதனால் நெடுநாள் 
உணவின்றிப் போனது.
விளைவு...?
ஒவ்வொருவராய் உருத்தெரியாமல் மாண்டனர்.

எஞ்சியிருந்தது சுபலனும் சகுனியும் மட்டுமே.

அன்று 
சுபலனக்குப் புரிந்தது .
அது வாழ்வின் 
இறுதி கட்டம் என்று.

அருகிருந்த சகுனியை வாஞ்சையுடன் அழைத்தான் -
சுபலன் 
மரணக் குரலில்.

சாவுக்களையில் 
முகம் தெளிவற்றிருக்க கைகளை நீட்டினான்.
தந்தை சுபலன்.

விரல்கள் 
விறைத்துக்
கொண்டிருந்தன.

"விரல்களை வெட்டு" குறுவாளை வீசினான் தந்தை சுபலன்.
திடுக்கிட்டான் 
மகன் சகுனி.

"ஐயகோ....

இந்த விரல்கள் தானே சின்னஞ் சிறு வயதில் 
என் கன்னம், முதுகு, வயிறு, உச்சந்தலை வருடியவை.

எனக்கு 
நாண் பூட்டி 
அம்பெய்தக் கற்றுத் தந்தவை
இந்த விரல்கள் தானே ?

நான் பசிக்கு 
அழுத போதெல்லாம் என் கண்ணீரைத் துடைத்த
இந்த விரல்களையா வெட்டச் சொல்கிறீர்கள் ?"

மரணப்படுக்கையில் ஆணையிடும்
அன்புத் தந்தையிடம் புலம்பினான் சகுனி.

மரணக் கட்டிலில்
இருந்து இறுதி
ஆணை.... என்ன செய்வான் சகுனி ?!

கண்களில் 
கண்ணீருடன் 
தந்தையின் விரல்களில் 
சீறிய இரத்தத்துடன் ஒவ்வொன்றாய் வெட்டினான் சகுனி.

சுபலனோ 
கண்ணீரின்றி 
கதறலின்றி 
வெட்டுண்ட உணர்வின்றி உணர்ச்சிப் பிழம்பாய் சற்றே உரத்த குரலில் சொல்லத் தொடங்கினான்.

"மகனே....
பார்த்தாயா.....
நம் குடும்பமே அழிந்துவிட்டது 

நானும்
இன்னும்
சில நாழிகைக்குள் இறந்து விடுவேன்.

இனி நீ அனாதை.

ஆனால் 
நீ சாகக்கூடாது.
நீ இருக்க வேண்டும்.
நீ வாழ வேண்டும் .

நம் குலத்தை 
அழித்த 
பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க வேண்டும்.

நீயாவது பிழைக்க வேண்டும் என்பதற்காகத் தான் கிடைத்த பிடி உணவை நாங்கள் உண்ணாமல் உனக்கு அளித்து நம் குடும்பத்தினர்
ஒவ்வொருவராய் மரணம் கண்டனர்.

இதோ
இறுதியாக நானும் சாகப்போகிறேன்.

எங்கள் 
ஒவ்வொருவர் இறப்பை -
துடிதுடித்த சாவைக் கண்ட
உன் கண்கள் 
பீஷ்மர் குலத்தில் ஒவ்வொரு இழப்பையும் கண்ணாரக் கண்டு மனதார மகிழ வேண்டும்.

அவர்கள் அத்தனை பேரின் சாவுக்கும் 
நீயே காரணமாய் இருக்க வேண்டும்."

"அத்தனை பேரையும் நானே கொல்வதா ? அது எப்படி முடியும் ?? 
அவ்வளவு பலத்திற்கு நானெங்கு போவேன் ??? "

கடும் துயரிலும்
சகுனியின் கண்கள் விரிந்து வியந்து கேட்டன தந்தையிடம்.

மரணவலி மீறி மெலிதாய் நகைத்த
சுபலன் 
சகுனியின் கண்களை உற்று நோக்கிச் சொன்னான்.

" மகனே... சகுனி !
 உன் பலம் உடல் வலிமை சார்ந்ததல்ல.
மன வலிமை சார்ந்தது.
புத்தியைத் தீட்டு. திட்டமிடு.
திட்டங்களால் தாக்கு.

சகுனி....கவனி

யாரையும் நேரடியாகத் தாக்காதே.
வேறு ஒருவரைத் தூண்டி விடு.
நீ நினைப்பவரை அழித்தொழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு.
அதுவரை குழப்பம் உண்டாக்கு.

நம் குலம் அழித்த பீஷ்மர் குலத்தை நிர்மூலமாக்கு.

இதோ நீ வெட்டிய
என் விரல்களை தாயக்கட்டைகளாக செய்து கொள்.

நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும் 
அந்த எண்ணாக 
நான் வந்து விழுவேன்... 
எதிரி வீழ்வான்.

தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவது தான் உன் திறமை."

வாய் குழற ஆரம்பித்து. இறுதி சொற்கள் மூச்சை போல்
இழுத்து இழுத்து வந்தன.

"எந்த குலத்தின் பெருமை 
நம்மால் கெட்டுவிடும் என எண்ணி 
நம்மை சிறையிலடைத்து பீஷ்மர் அழித்தானோ
அந்த குலத்தையே நாசம் செய்வதுதான் லட்சியமாக இருக்குமென
சத்தியம் செய்..

கடைசியாக ஒரு வார்த்தை....

அன்பு....
பாசம்......
கருணை....
நன்றி.....
என்பதை எல்லாம் நெஞ்சில் நிறைக்காதே ..! 

உன் மனதில்
வெறுப்பு....
வெஞ்சினம்..... 
இகழ்ச்சி.....
பழி.....
பலி...
மட்டும் 
எப்போதும்
நிறைந்திருக்கட்டும்."

சத்தியம் செய்ய கையைத் தூக்கினான் மகன் சகுனி.

எங்கிருந்து 
அப்படி ஒரு 
சக்தி வந்ததோ சகுனியின் கையைப் பிடித்து 
இழுத்து தள்ளி விரல்களை வெட்டிய வாளினை எடுத்து சகுனியின்  கணுக்காலை வாளின் பின்புறத்தால் 
அடித்து உடைத்தான் சுபலன்.

" தந்தையே.....
ஏன் இப்படி 
காலை உடைத்து என்னை முடமாக்கி விட்டீர்கள்....?!

இனி நான்
காலைத் 
தாங்கித் தாங்கி தான்
நடக்க முடியும்.
எல்லோரும் என்னை ஏளனம் செய்வார்கள் .

இதையா விரும்புகிறீர்கள் ?

ஒரு தந்தை செய்யும் காரியமா இது.... ? " 
கண்ணீர் மல்க கோபத்துடன் 
கேட்டான் சகுனி.

"மகனே....
என்னை 
மன்னித்து விடு.

இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே
பார்க்க வேண்டும்.

அது 
உன் நெஞ்சில் கேவலமாய் பதியும்.
கோபமும் வெறுப்பும் அவர்கள் மேல் எழும்பும்.
அது எரிதழலாய்
உன் மனதில் பரவும்.

நீ வேதனையோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் 
உன்னை ஏளனம் செய்யும்.

எழும் ஏளனமே 
பீ....ஷ்....மர் 
கு...லம் அ.....ழிக்...கும்"

சுபலன் உயிர் நொடிகளில் பிரிந்தது.

அது கண்டு 
சகுனி 
எழுப்பிய சப்தம் அரண்மனையில் இருந்த பீஷ்மருக்கும் கேட்டது.

அது வெறும்
மரண ஒலி என்று அரண்மனையில் பலரும் நினைத்தார்கள். பீஷ்மர் கூட அப்படித்தான் அக்கூக்குரலை அலட்சியப்படுத்தினார்.

ஆனால் அது 
பீஷ்மர் குலத்திற்கான 
சங்கோசை என 
புரிந்து கொண்ட காலம் அர்த்தத்துடன் புன்னகைத்தது.



Leave a Comment