திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு.....
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த நவம்பர் 23 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம் பஞ்சமி தீர்த்தத்துடன் இன்று நிறைவு பெற்றது.
காலை 6 மணிக்கு ஏழுமலையான் கோயில் கருவறையிலிருந்து மஞ்சள், குங்குமம், அட்சதை, தாலிக் கயிறு, கங்கணம், பட்டு வஸ்திரம், மலர் மாலை, புதிய தங்க ஆபரணம், உள்ளிட்டவற்றுடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாத வகைகளையும் அர்ச்சகர்கள் மூங்கில் கூடையில் வைத்து திருமலையிலிருந்து திருப்பதிக்குக் கொண்டு வந்தனர்.
அங்கிருந்து சீர்வரிசைகள் கோவிந்தராஜ சுவாமி கோயிலை அடைந்த பின், யானை மேல் லட்டு வஸ்திரம், மலர் மாலை உள்ள கூடைகளை வைத்து ஊர்வலமாக திருச்சானூர் பசுப்பு மண்டபத்தை அடைந்தது. அங்கு சீர்வரிசைகளை தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் அர்ச்சகர்கள், திருமலை ஜீயர்கள் எதிர்கொண்டு வரவேற்று யானை மேல் இருந்த சீர்வரிசைக்கு பூஜை செய்து மரியாதை அளித்து பெற்றுக் கொண்டு, திருச்சானூர் திருக்குளக்கரைக்கு கொண்டு சென்று தாயாருக்கு அபிஷேகம் செய்தனர்.
மேலும் ஏழுமலையான் அனுப்பிய சீர்வரிசைகளைக் கொண்டு தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்தின் போது ஏழுமலையான் தாயாருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கிய வில்வம், துளசி இலைகளால் ஆன 2 கிலோ எடையுள்ள தங்க மாலை மற்றும் பவளம், தங்க காசுகள் கோர்க்கப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க மாலை உள்ளிட்டவற்றை அணிவித்து தாயாருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவையொட்டி, திருச்சானூர் கோயில் பகுதியில் திருக்குளத்தில் உள்ள மண்டபத்தில் தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாரை எழுந்தருளச் செய்து பால், தயிர், தேன், பழங்கள், பஞ்சாமிர்தம், மஞ்சள், செஞ்சந்தனம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
ஒவ்வொரு பொருள்களால் அபிஷேகம் முடிந்த பின்னும், தாயாருக்கு உலர் பழங்கள், துளசி, ரோஜா, குருவிவேர் உள்ளிட்டவற்றால் தயாரித்த மாலைகள், கீரிடம், ஜடை உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டு சாம்பிராணி புகை, கற்பூர ஆரத்தி காண்பித்து நிவேத்யம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் தாயாருக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் திருமஞ்சனம் முடிவு பெற்ற பின், சக்கரத்தாழ்வாரை திருக்குளத்துக்கு கொண்டு சென்று 3 முறை சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூழ்க வைத்து தீர்த்தவாரி நடத்தினர்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். செவ்வாய் இரவு வரை புனித நீராட திருக்குளம் திறந்து வைக்கப்பட உள்ளது.
திருச்சானூரில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் இன்று நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கொடிமரத்தில் ஏற்றப்பட்ட யானைக் கொடி இறக்கப்பட்டது. பிரம்மோற்சவத்தைக் காண வருகை தந்த முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நன்றி கூறி வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பின்னர், பத்மாவதி தாயார் தங்கப் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தபடி கோயிலுக்குள் சென்றார்.
Leave a Comment